“தோல்வியின் போதும் துவளாதே வெற்றியின் போது கண்டபடி துடிக்காதே” -ரிஸ்வான் …!

றிஸ்வான்….ரசிக்க வைக்கின்ற கிரிக்கெட் லைகர் ராசா.
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
“தோல்வியின் போதும் துவளாதே வெற்றியின் போது கண்டபடி துடிக்காதே”

“வெற்றியின் போது அல்லாஹுத்தஆலாவை துதி செய்து கொள்ளுங்கள்”

சிலரை பார்த்தவுடன் பிடிக்கும் சிலரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். பாகிஸ்தான் துடுப்பாட்டன் Behind Stump Glow மாட்டிய காவல்காரன் ரிஸ்வான் இதில் இரண்டாம் ரகம்.

நேற்று இரவு ஏசியன் Trophy யில் இந்தியாவுக்கு எதிரான 181 ஓட்டங்களை பாகிஸ்தான் கடைசி ஓவரின் ஐந்தாம் பந்து வரை வெந்து தணியா காட்டோடு வெறித்தனமாக துரத்தியபோது ரிஸ்வானின் 51 பந்துகளில் 71 ஓட்டங்கள்தான் limelight.பாகிஸ்தான் nail biting வெற்றியின் பிரதான பங்காளி ரிஸ்வான்தான்.

இந்திய எதிர் பாகிஸ்தான் ஆட்டங்கள் என்பது எப்போதுமே அன்டர் பிரஷ்ஷர் அட்டகாசங்கள் தான். அதிலும் சேஸ் பண்ணுவது என்பது அட்டகாசங்களில் அல்டிமேட் அவதாரம். கடந்த இரவின் போட்டியில் ரிஸ்வானின் அந்த 71 ஓட்டங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கான ஆதார சுருதியாக அமைந்தது.

தொடர்ந்து ரிஸ்வானை அவதானித்து வந்து கொண்டிருக்கின்றேன். அவரது கீப்பிங் துடுப்பாட்டம் என்ற கிரிக்கட்டைய சமாச்சாரங்களுக்கு அப்பால் மைதானத்தில் அவர் நடந்து கொள்கின்ற விதம் ரிஸ்வானை ஏன் பிடிக்கின்றது என்ற கேள்விக்கு கிடைக்கின்ற பத்துப் பதில்களுல் ஒன்றாக அமைந்துவிடுகிறது.

சற்று அவதானித்துப் பாருங்கள் 50 ஓட்டங்களோ அல்லது நூறு ஓட்டங்களோ கடாசிக்கின்ற ஹூர்ரே தருணங்களில் எல்லாம் றிஸ்வான் அவுட் ஒஃப் கொன்ட்ரோலில் ஓகர்சம் அனுபவிப்பதில்லை. கண்டமேனிக்கு மைதானத்தில் அவன் கசடதபர வாசிப்பதில்லை. தாண்டவ மூர்க்கத்தில் தாம் தூமென்று குதிப்பதில்லை. எப்போதுமே அடக்கி வாசிக்கின்றார். அந்த அடக்கமே ஐஸ்வர்யத்தனமாக இருக்கிறது.

வெற்றிகளைப் போலவே தோல்விகளும் பிடரி நரம்புக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது என்பதனை புரிந்து வைத்திருக்கின்றார். அதனால்தான் வெற்றிகளால் கொண்டாடுகின்ற தருணங்களிலும், தான் தோல்விகளால் துண்டாடுகின்ற தருணங்களிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கி வாசிக்கின்றார்.

மைதானத்தில் அரை செஞ்சரிகளின் போதும் முழு செஞ்சரிகளின் போதும் துடுப்பை நிலத்தில் போட்டு விட்டு ஆகாயத்தின் பக்கம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வை துதி செய்கின்றார். அல்லாஹ்வுக்கு ஒன் த ஸ்பொட்டில் நன்றி செலுத்துகின்றார். இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி வேறெதுவும் கிடையாது என்பதனை மிக அழகாக புரிந்து வைத்திருக்கின்றார்.

அல்குர்ஆனின் சூரா நஸ்ரில் “வெற்றியின் போது அல்லாஹ்வை துதி செய்து கொள்ளுங்கள்” என்பதனை ஆணித்தரமாக பின்பற்றி வருகின்ற ரிஸ்வானின் மைதான மேனரிஸம் மாலை நேரத்து மயக்கம்.

மெகா சைஸ் வெற்றிகளின் போது கூட ஸ்மோல் சைஸ் புன்னகையால் அதனை கொண்டாடுகின்றார். மெகா சைஸ் தோல்விகளின் போது அதே ஸ்மால் சைஸ் புன்னகையால் கடந்து செல்லுகின்றார்.

நோ ஆக்ரோஷம்……. நோ …….. நோ அதகளம்……. நோ ஆவேசம். வெற்றிகளின் போது ஓவராக துள்ளி குதித்தால் அதே வேகத்தில் தரையில் வந்து தபாரென விழுந்து எலும்புகள் நொறுங்க வேண்டி வரும் என்பதனை கற்று வைத்திருக்கின்றார்.

நேற்று இரவு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அத்தனை அண்ட பிரஷர் குக்கருக்குள்ளேயும் கூட அவிந்து போகாமல் நிதானமாக ஆடினார் றிஸ்வான். கேமராக்களின் குளோசப்புகளில் ரிஸ்வான் முகத்தை அவதானித்து அதில் பதற்றமே இல்லை ஆனாலும் நிதானமும் ஒரு வகையான தேக்கு மர வேர் உறுதியும் படர்ந்து போயிருந்தன. absolute temperament.

கடந்த இரவு பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றிருந்தால் ஆகக் குறைந்தது றிஸ்வான் என்கின்ற அந்தப் பையனுக்காக வேண்டியாவது “ச்சைக்” என்று உதடு பிதுக்கி உறக்கமே வராமல் நடுநிசி இரண்டு மணியை தாண்டியும் விழிகளில் கவலையின் ஹை டெக் கமராக்களால் பொன்னியின் செல்வன் சூட்டிங் நடாத்தியிருப்பேன்.

பார்க்கப் பார்க்கப் பிடிக்கின்ற மனிதர்களுக்குள்ளே எப்போதுமே இந்த ரிஸ்வான் என்கின்ற பையனும் இருக்கின்றான்.

2012/09/05

சபருல்லா ஹாசீம் (சட்டத்தரணி)

கிண்ணியா