நாயகன் மீண்டு வரான் -அய்யப்பனின் பார்வையில்..!

  1. நாயகன் மீண்டு வரான் :

“Bits and Pieces” – இலங்கை கிரிக்கெட், சில மாதங்களுக்கு முன்னாடி இருந்த நிலைம இதுதான். ஒரு காலத்தில் ஜாம்பவான்கள் உலா வந்த இலங்கை அணிக்கு, என்னதான் ஆச்சுன்ற உண்மையான வருத்தம் எல்லா நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இருந்துச்சு.

சின்ன நாடா இருந்தாலும் கிரிக்கெட் வல்லரசுகளுக்கு இணையா கிரிக்கெட்ட ஆரவாரிச்சுக் கொண்டாடுற மக்கள், சாதனை நாயகர்களா உலா வந்த இலங்கை கிரிக்கெட்டர்கள், 90-க்கு பிறகான அவங்களோட அசுர வளர்ச்சி, அதன் பரிசா, அர்ஜுன ரணதுங்க தூக்குன 96 உலககோப்பை, இப்படி ஒவ்வொன்னும் அவங்களுக்கும் கிரிக்கெட்டுக்குமான நெருக்கமான பந்தத்த, பெருக்குத் தொடர் கணக்குல அதிகரிச்சுட்டே போச்சு. ஆசிய அணிகள்ல மட்டுமில்லை சமயத்துல ஒட்டு மொத்த உலக கிரிக்கெட்டுக்கும் சிம்மசொப்பனமாக இலங்கை கிரிக்கெட் அணியும் வலம் வந்துச்சு….

அதுவும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மூணுல ஏதோ ஒன்னு ஆஸ்திரேலியாவ தூக்கிப் போட்டு பந்தாடுனாக் கூட, அத மத்த இரு நாட்டு ரசிகர்களும் சேர்ந்தே அத ரசிச்சிருக்கோம். ஆசிய நாடுகள்ன்ற ஒரு பிணைப்பும் அதுக்குக் காரணம்.

ஆனா அப்படியிருந்த அணிகள்ல, சுணக்கம் கொஞ்சம் ஏற்பட்டது. பாகிஸ்தானும் அப்படி ஒரு பள்ளத்துல இருந்து மீண்டு வந்துடுச்சு. ஆனா இலங்கை அணியோட நிலைமை, ஐசியூலதான் தொடர்ந்துச்சு. கடந்த டி20 உலகக் கோப்பைல தேர்வாகி வரவே, சின்ன அணிகள் கூட குவாலிஃபயர் ஆட வேண்டிய நிலைமை. 2014-ல டி20 உலகக் கோப்பைய வாங்குன ஒரு அணி, அங்கருந்து சீட்டுக்கட்டா சரிஞ்சு விழுந்துடுச்சு.


இதற்கான காரணங்களப் பத்தி, ஒருமுறை கிளப்ஹவுஸ்ல பேசிட்டு இருந்தப்போ, இலங்கை நண்பர்கள் மூலமா நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அரசியல் குளறுபடிகள், கிரிக்கெட் போர்ட் உள்குத்துகள், வீரர்கள் சம்பளப் பிரச்சினை, கிரிக்கெட்டோட ஜீவ நாடியான உள்ளூர்ப் போட்டிகள் முறையா நடத்தப்படாததுனு நிறையவே சொன்னாங்க. கேட்கவே வருத்தமா இருந்துச்சு. அவங்க சொன்னது எல்லாமே உண்மைதான்.

ஒரு கட்டத்தில பாகிஸ்தான் இருந்தது மாதிரி, கேப்டன்களப் பந்தாடுறது, ஒரு வீரர் நல்லா செட் ஆட ஆரம்பிச்சு அவர்மேலான நம்பிக்கை துளிர் விடறப்போவே, அதே வீரர், அடுத்தடுத்து மோசமா ஆடி காணாம போறது, பெயர்கள் பழகும் முன்பே அந்த வீரர்களுக்கு நியாயமான மறுவாய்ப்புகள் மறுக்கப்பட்டு கிரிக்கெட் போர்டால தூக்கி எறியப்படறது, அதனால கோர் அணியா இணைஞ்சு விளையாடப்படறதுல இருந்த சிக்கல்னு வெறும் எதிர்மறை விஷயங்கள மட்டுமே அங்க பார்க்க முடிஞ்சது. இது உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருக்கும் வேதனையான விஷயமாத்தான் இருந்துச்சு.

இழந்த இடத்தை மீட்க ஏதாவது ஒரு தீப்பொறி வேணுமில்லையா, அந்தத் தீப்பொறி இரண்டு ரூபத்தில் உருவாச்சு; ஒன்னு ரொம்ப நாளா நிறுத்தப்பட்டிருந்த இலங்கை ப்ரீமியர் லீக் மூலமாகவும், இன்னொன்னு இண்டர்நேஷனல் கிரிக்கெட்டை தூக்கிவிட கோச் மிக்கி ஆதர் மூலமாகவும் நடந்தது.

டொமஸ்டிக் கிரிக்கெட்ட தூக்கிவிட வந்த LPLனால, ஹசரங்க, தீக்ஷன, அசலாங்க, சமீர கருணரத்ன உள்ளிட்ட ஸ்டார் பிளேயர்கள் உலகக் கிரிக்கெட் அரங்கத்துக்கு தனது இருப்பை, தரவரிசைப் பட்டியல் மூலமா சத்தமா அறிவிச்சது, சமீப காலத்தில இல்லாத அளவு, நடந்து முடிஞ்ச ஐபிஎல்ல நிறைய இலங்கை வீரர்கள் சிறப்பாக பெர்ஃபார்ம் பண்ணதுன்னு கொஞ்சம் கொஞ்சமா இந்த ஒரு வருசத்துல நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் அவங்க தரப்புல நடந்துட்டு வந்துச்சு.

ஆனா இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா, தன்னம்பிக்கைய பலமடங்காக்குறதா, ஆஸ்திரேலியாவுடனான இலங்கை வெற்றி அமைஞ்சிருக்கு. டி20 தொடர்ல, தொடர இழந்தாலும், இவங்க வேற மாதிரின்றத ஏற்கனவே பார்க்க வச்சாங்க. முதல் இரண்டு போட்டிகள்லயும், 130 ரன்களுக்குள்ள சுருண்ட அணி, மூன்றாவது போட்டியில, 177-ன்ற இலக்கையே துரத்திட்டாங்க. அதுவும் சாதாரணமா இல்ல, கடைசி மூன்று ஓவர்கள்ல, ஹாசில்வுட், ரிச்சர்ட்சன் அண்ட் ரிச்சர்ட்சன் பந்துகள் எல்லாத்தையும் தெறிக்க விட்டப்போ, லைட்டா, பழைய பலம் வாய்ந்த அணியோட வாடையப் பார்க்க முடிஞ்சது. ஷனக லைஃப் டைம்கான ஒரு கேப்டன் இன்னிங்ஸ ஆடிட்டுப் போயிட்டார்.

அதுகூட தனி ஒரு வீரனோட வெற்றியாப் பார்க்கப்பட்டுச்சு. ஆனா ஒருநாள் தொடர்தான், மறுபடியும் அணியோட ஒளிக்கதிர்கள் வெளிய வரத் தொடங்கியிருச்சுன்றத உறுதி பண்ணி இருக்கு. வென்றிருக்க வேண்டிய முதல் போட்டினாலும் சரி, ஆஸ்திரேலியாவையே ஆல் அவுட் ஆக்கின இரண்டாவது போட்டியில, கருணரத்ன, தனஞ்சய டீ சில்வ, ஷமீர, தீக்ஷனனு ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்டோட ஆர்ப்பரிப்புனாலும் சரி, மூன்றாவது போட்டியில, 300-ஐ நெருங்குற இலக்குல சிறப்பா இருந்த பதும் நிஸங்க, மெண்டீஸ் பேட்டிங்னாலும் சரி, நான்காவது போட்டியில அதகளம் காட்டுன தனஞ்சய, அசலங்கவோட அசத்தல்னாலும் சரி, துனித் வெல்லலேஜோட அற்புதமான பந்து வீச்சுனாலும் சரி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், யாரோ ஒருத்தர் முன்னாடி வந்து அணிய முன்னெடுத்துட்டுப் போய்ட்டே இருந்தாங்க. உடைந்து நொறுங்கியிருந்த அணி, உருவம் பெற்று வெற்றிப் பாதைக்குத் திரும்ப ஆரம்பிச்சுடுச்சு. நான்காவது போட்டியில், 96 உலகக்கோப்பை மாதிரி 43 ஓவர்கள் சுழலை வைத்து சுழற்றி அடித்துவிட்டது.

அவுட் ஆஃப் ஃபார்ம்ல இருக்க எந்தவொரு வீரருக்கும் திரும்ப வர்றதுக்கு ஒரு மெகா இன்னிங்க்ஸ் போதும். அதே போலத்தான் அவுட் ஆஃப் ஃபோகஸில இருக்க அணிகளுக்கும். அந்த ஒரு வெற்றி, ஏற்கனவே இலங்கைக்கு கிடைச்சிடுச்சு.

குறிப்பா இது எல்லாத்தையும் தாண்டி, ஒரு அணியா இணைஞ்சு ஆடுனதுல விட்டுட மாட்டோம்ன்ற ஆளுமையும் தெரிஞ்சது. எந்த ஒரு அணிக்கும் இதெல்லாம்தான் எனர்ஜி பூஸ்டர்ஸ். நடுவுல கொஞ்ச காலம் தோத்துடவோம்னு முடிவு செஞ்ச மாதிரி ஆடின அணி, இப்போ பழைய கில்லர் ஸ்ப்ரிட்டோட ஆடுது. இதற்கும் வெற்றிக்குமான தகவு எப்போவும் நேர்தான்.

Expired and burried deepனு புதைக்கப்பட்ட நாயகன் திரும்ப வந்துட்டான், அதுவும் இருக்கையாக சிம்மாசனம்தான் வேணும்ன்ற அதே பழைய துடிப்போட…..

அன்ஃபாலோ டிரெண்ட இலங்கை ரசிகர்கள் கையிலெடுத்த நிகழ்வு நடந்து சரியாக, ஒரு வருஷமாகுது. ஆனா அதே ரசிகர்கள்தான், தன்னோட அணிய மட்டுமில்ல, தங்களோட நாட்டிற்கு வந்து ஆடிய ஆஸ்திரேலியாவையும் வாழ்த்துற ப்ளக் கார்டுகளோட உற்சாகப்படுத்தியிருக்காங்க. சொந்த சோகம், தேசத்துல இருக்க கடினமான சூழல் எல்லாத்தையும் தாண்டியும் தன்னோட அணிக்காக அவங்க வந்து கொடுத்த சப்போர்டும் அதற்கு பதிலாக இலங்கை அணி அவங்களுக்குக் கொடுத்திருக்க கோப்பையும் நெகிழ்ச்சி இழையோடும் தருணங்கள்.

யார் சொன்னது, Cricket is juz game அப்படினு!?

It is a bundle of emotions and inspiring resurrections…..!?❤

by Ayyappan❤