நீரஜ் சோப்ரா பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு.. வினேஷ் போகத் பயிற்சிக்கு எவ்வளவு செலவு தெரியுமா?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட மொத்தமாக 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் 3 பதக்கங்களையும், இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தையும், மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
கடந்த ஒலிம்பிக் தொடரை போல் மீண்டும் தங்க மகன் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் அபாரமான செயல்பாடுகள், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளியுடன் திரும்பினார். ஆனால் வெள்ளிப் பதக்கம் வென்றாலும் என்றும் நீரஜ் சோப்ரா தங்க மகன் தான் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஏனென்றால் தடகளத்தில் இந்தியா பெறும் 2வது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். இந்த 2 பதக்கத்தையும் நீரஜ் சோப்ரா தான் கைப்பற்றியுள்ளார். 2 ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறையும் பதக்கத்துடன் திரும்புன் கன்சிஸ்டன்சி பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நீரஜ் சோப்ராவை போல் ஈட்டி எறிதலில் அசத்த வேண்டும் என்று இளைஞர்கள் பலரும் ஊக்கமடைந்துள்ளனர்.
தற்போது நீரஜ் சோப்ராவின் பயிற்சி குறித்த தகவல் வெளி வந்துள்ளது. அந்த வகையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் சிறப்பாக செயல்படுவதற்காக நீரஜ் சோப்ரா 2 இடங்களில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதலில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பட்டியாலாவில் பயிற்சி மேற்கொண்ட நீரஜ் சோப்ரா, அதன்பின் ஐரோப்பாவில் பயிற்சி செய்து வந்துள்ளார்.
இதற்காக மட்டுமே மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ.5.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சிக்கு ரூ.41.81 கோடியும், பெங்களுரில் உள்ள பிரகாஷ் படுகோனே அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட பிவி சிந்துவின் பயிற்சிக்கு ரூ.3.13 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லியில் உள்ள கரிணி சிங் துப்பாக்கிச் சுடுதல் அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட மனு பாக்கரின் பயிற்சிக்கு ரூ.1.68 கோடியும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ராவின் பயிற்சிக்கு ரூ.1.30 கோடியும், தமிழக வீரர் ஷரத் கமல் பயிற்சிக்கு ரூ.1.14 கோடியும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பயிற்சிக்கு ரூ.70.45 கோடியும் செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.