”நோ” சொல்லி ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்கனும்.. பாபர் அசாமிற்கு பாடம் நடத்திய ஷாகித் அப்ரிடி

”நோ” சொல்லி ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்கனும்.. பாபர் அசாமிற்கு பாடம் நடத்திய ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி மீண்டும் தேடி வந்த போது பாபர் அசாம் மறுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் நடக்கும் ஈகோ சண்டையும் அந்த அணிக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி மற்றும் ரிஸ்வான் இடையில் நல்ல நட்பு இல்லாமல் உள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மருமகன் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக மாமனார் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஷாகித் அப்ரிடி பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில் டி20 உலகக்கோப்பை வரை ஷாகீன் அப்ரிடி தான் கேப்டன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பாபர் அசாமிடம் மீண்டும் கேப்டன்சி செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கோரியிருந்தால், அதனை பாபர் அசாம் தவிர்த்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக பாபர் அசாம் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது பாபர் அசாம் மட்டும், நான் மீண்டும் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை.

நீங்கள் தான் ஷாகீன் அப்ரிடியை கேப்டனாக நியமனம் செய்தீர்கள். நாங்கள் அனைவரும் அவரின் கீழ் விளையாட தயாராக இருக்கிறோம். ஏனென்றால் ஷாகீன் அப்ரிடியுடன் நீண்ட நாட்களாக இணைந்து விளையாடி வருகிறேன். அவருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று கூறியிருந்தால், பாபர் அசாம் மீதான மதிப்பு உச்சத்திற்கு சென்றிருக்கும்.

ஆனால் கேப்டன்சியை மீண்டும் ஏற்றுக் கொண்டது பாபர் அசாமின் தவறில்லை. அதற்கு தேர்வுக் குழுவும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அதேபோல் பாபர் அசாமிற்கு கேப்டன்சி செய்ய வரவில்லை என்று தேர்வு குழுவினர் வெளிப்படையாக பேசியிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பின் பாபர் அசாம் கேப்டன்சியில் இருந்து விலகினார்.

அதன்பின் டி20 கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் ஷாகீன் அப்ரிடி தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதேபோல் பிஎஸ்எல் தொடர் தோல்வியும் ஷாகீன் அப்ரிடி மீதான நம்பிக்கை இல்லாமல் போக காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.