பதவி விலகுகிறார் ரவி சாஸ்திரி-புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா ?

 இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவி சாஸ்திரி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ரசிகர்கள் அதிருப்தி

இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரின் பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்கக்கூடாது எனத்தெரிவித்து வருகின்றனர்.

கோலி – சாஸ்திரி கூட்டணி

இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.

சாஸ்திரி விலகல்?

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவிருப்பதாக ரவி சாஸ்திரி பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருடன் தான் விலக விரும்புகிறேன் என பிசிசிஐ நிர்வாகிகளிடம், ரவி சாஸ்தரி தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டுமின்றி மொத்த பயிற்சியாளர்கள் குழுவும் விலகவுள்ளது. பீல்டிங் கோச் ஸ்ரீதர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம் தெரியுமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் அதிகபட்ச வயதுவரம்பு 60 வயதுவரை மட்டுமே. ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். இதன்காரணமாகவே இந்த முடிவினை ரவிசாஸ்திரி எடுத்திருப்பாகத் தெரிகிறது.

புதிய பயிற்சியாளர் குழாம்.

ரவிசாஸ்திரி மட்டுமின்றி புதிய பயிற்சியாளர் குழுவை நியமிக்கும் எண்ணத்தில் தான் பிசிசிஐ-ம் இருப்பதாக தெரிகிறது. ஐசிசி கோப்பை கனவு ஒவ்வொரு முறையும் தகர்ந்து வருவதால் புத்தம் புதிய பயிற்சிக்குழுவுடன் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனவே இந்தாண்டு இறுதிக்குள் அடுத்த பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ பெறத்தொடங்கும் எனக்கூறப்படுகிறது.

அடுத்த பயிற்சியாளர் யார்?

ஒரு வேளை ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.