பரம எதிரிக்கு கூட இடம் கொடுப்பேன்.. தோனிக்கு கொடுக்க மாட்டேன்.. யுவராஜ் சிங் வம்படி முடிவு

பரம எதிரிக்கு கூட இடம் கொடுப்பேன்.. தோனிக்கு கொடுக்க மாட்டேன்.. யுவராஜ் சிங் வம்படி முடிவு

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான யுவராஜ் சிங் சமீபத்தில் உலக அளவிலான 11 வீரர்கள் கொண்ட அணியை ஒரு பேட்டியில் அறிவித்தார். அதில் அவரது எதிரியாக பார்க்கப்படும் ஆண்ட்ரூ பிளின்டாஃப்புக்கு கூட ஒரு இடம் அளித்திருக்கிறார். ஆனால், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான தோனிக்கு இடம் அளிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மூன்று இந்திய வீரர்களில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. யுவராஜ் சிங் தேர்வு செய்த அணி உலக கிரிக்கெட் லெவன் – சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.

இந்த அணியில் யுவராஜ் சிங்கின் எதிரி வீரராக கருதப்படும் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயரும் உள்ளது. அவர்கள் இருவருக்கும் 2007 டி20 உலகக் கோப்பையில் கடும் மோதல் எழுந்தது. அப்போது யுவராஜ் சிங்கை மோசமான வார்த்தைகளால் திட்டினார் ஆண்ட்ரூ பிளின்டாஃப். அதனால் கோபமடைந்த யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து இருந்தார். அந்த மறக்க முடியாத நிகழ்வால் அவர்கள் இருவரும் எதிரி வீரர்களாகவே பார்க்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தனது சக வீரரான தோனியை அவர் இந்த அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், எதிரி வீரரை கூட தேர்வு செய்து இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 11 வீரர்கள் கொண்ட அணியில் நிச்சயம் ஆடம் கில்கிறிஸ்ட் இடத்தில் தோனியை தேர்வு செய்து இருக்கலாம். ஏனெனில், கில்கிறிஸ்ட் ஒருநாள் அணியில் துவக்க வீரராகவே ஆடி வந்தார்.

யுவராஜ் சிங் தேர்வு செய்த அணியில் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்து இருக்கும் நிலையில், மிடில் ஆர்டரில் தோனியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அதை தவிர்த்து இருக்கிறார். 2007இல் தோனி கேப்டன் பதவியை பெற்றதில் யுவராஜ் சிங்கிற்கு அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகவே, அவர் தோனியின் பெயரை தவிர்த்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.