பலத்த அடி வாங்கிய வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?
தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதே பட்டியலில் இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகள், மூன்று தோல்விகளை சந்தித்து உள்ளது. தற்போது தென்னாப்பிரிக்கா 38.89 வெற்றி சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 சதவீத வெற்றியுடன் ஒன்பதாவது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் உள்ளது. வங்கதேச அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகளுடன் 25 சதவீத வெற்றியுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்து இருக்கிறது.
68.51 வெற்றி சதவீதத்துடன் இந்தியா இந்தப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அந்த அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று இருக்கிறது. அதன் வெற்றி சதவீதம் 62.5 ஆகும். அடுத்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும்.
அதன் பின் நியூசிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதன் முடிவில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.