பழைய ஐபிஎல் பகை.. கோலியை குறி வைத்து அடித்த கம்பீர்.. ஆடிப் போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

பழைய ஐபிஎல் பகை.. கோலியை குறி வைத்து அடித்த கம்பீர்.. ஆடிப் போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலியை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறி வைத்து இருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. நேற்று பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் இனி இந்திய அணி வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள் என பத்து அம்சங்கள் அடங்கிய விதிகளை குறிப்பிட்டு இருந்தது.

அந்த விதிகளில் பெரும்பாலானவை விராட் கோலியை குறி வைத்தே உருவாக்கப்பட்டு இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கவுதம் கம்பீர் தான் இந்த விதிகளை பிசிசிஐ அறிவிக்க காரணம் என கூறப்படுகிறது. விராட் கோலி உடனான 2023 ஐபிஎல் பகையை மனதில் வைத்து தான் கம்பீர் இது போன்ற நடவடிக்கையை எடுத்து இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

பிசிசிஐ வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இனி அனைத்து இந்திய அணி வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது முக்கிய அம்சமாக இருந்தது. அது மட்டும் இன்றி இனி ஒரு கிரிக்கெட் தொடரின் போது வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவற்றை செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என பல விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதில் பெரும்பாலானவை விராட் கோலியை குறி வைப்பதாகவே உள்ளன. குறிப்பாக இனி இந்திய அணி வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் இரண்டு வாரங்கள் மட்டுமே செலவிட அனுமதி உண்டு என்றும், வீரர்கள் தங்களுக்கென தனிப்பட்ட உதவியாளர்கள், சமையல் நிபுணர்கள், பாதுகாவலர்கள் ஆகியோரை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இது நேரடியாகவே விராட் கோலியை தான் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் விமர்சகர்கள். ஏனெனில், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நான்கு போட்டிகளின் போதும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

கோலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார். அவர்களுக்கென தனி உதவியாளர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி பிசிசிஐ வெளியிட்டு உள்ள விதிகளில் இனி கிரிக்கெட் வீரர்கள் நான்கு பைகளை மட்டுமே எடுத்து செல்லலாம் என்றும், அதிகபட்சம் 150 கிலோவுக்கான உடைமைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

குடும்பத்தினர் உடன் வந்தால் அதிக உடைமைகள் எடுத்துச் செல்ல நேரும். அதை தவிர்க்கவே இந்த விதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இதுவும் விராட் கோலியை தான் சுட்டிக் காட்டுகிறது என்கிறார்கள். அதே போல பயிற்சி முடியும் முன்பே அந்த இடத்தை விட்டு செல்வது போன்றவை செய்யக்கூடாது எனவும், அணியினருடன் ஒரே பேருந்தில் தான் அனைத்து வீரர்களும் பயணம் செய்ய வேண்டும் எனவும், ஒரு தொடரின் இடையே விளம்பரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது எனவும் பிசிசிஐ விதிகளில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற பிற முன்னணி வீரர்களும் இது போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டாலும், அவர்களை காட்டிலும் விராட் கோலி தான் அதிக விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பயிற்சியின் போது அவர் விருப்பப்பட்ட நேரத்தில் வருவதும், மைதானத்தை விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

எனவே, கவுதம் கம்பீர் விராட் கோலியைத்தான் குறி வைத்து இந்த விதிகளை அமல்படுத்த செய்து இருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். கம்பீர் பழைய பகையை மனதில் வைத்து இவ்வாறு செயல்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.