பாகிஸ்தான் மெகா சொதப்பல்.. மானத்தை காப்பாற்றிய அப்ரிடி.. கதிகலங்க வைத்த அயர்லாந்து

பாகிஸ்தான் மெகா சொதப்பல்.. மானத்தை காப்பாற்றிய அப்ரிடி.. கதிகலங்க வைத்த அயர்லாந்து

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது கடைசி குரூப் போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்தது. ஏற்கனவே இந்த குரூப்பில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்து இருந்தது.

இந்த நிலையில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த குரூப்பில் மூன்றாவது இடத்தையாவது பெறுமா? என பாகிஸ்தான் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த போட்டியிலும் மோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் தோல்வி அடைவது போல சென்றது. பின்னர் ஷஹீன் ஷா அப்ரிடி அடித்த இரண்டு சிக்ஸர்களால் 19வது ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதும் அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.’

இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த மூன்று நாட்களாக இந்த போட்டி நடந்த பகுதியில் மழை பெய்து வந்ததால் பிட்ச் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்த நிலையில் பிட்ச்சில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தது. அதனால், பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவியது. அதை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் அணி விக்கெட் வேட்டையாடியது. அயர்லாந்து அணி 32 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

அதன் பின் சுதாரித்த அயர்லாந்து அணி கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேரத் டேலனி 19 பந்துகளில் 31 ரன்களும், ஜோஸ் லிட்டில் 18 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர். ஷஹீன் அப்ரிடி 3, முகமது அமீர் 2, இமாத் வாசிம் 3, ஹாரிஸ் ரௌப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்த பாகிஸ்தானில் அணி 107 ரன்கள் என்ற எளிய இலக்கை சேசிங் செய்யத் தொடங்கியது. பவர் பிளே ஓவர்கள் வரை பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் சேர்த்து இருந்தது. ஆனால், அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்த அந்த அணி ஒரு கட்டத்தில் 62 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது.

அப்போது பாபர் அசாம் களத்தில் இருந்தார். அவர் நிதானமாக ரன் சேர்த்து வந்தார். 18 வது ஓவரில் 95 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது பாகிஸ்தான். அப்போது வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கடைசி ஓவர் வரை போட்டி செல்லுமா? என பாகிஸ்தான் அணி ரசிகர்கள் கவலையுடன் இருந்தனர்.

அப்போது ஷஹீன் அப்ரிடி 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எளிதாக வெற்றி பெறக்கூடிய போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்விக்கு அருகே சென்று பின்னர் வெற்றி பெற்றது மேலும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.