டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. கேப்டன் தசுன் ஷனகா 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய ரோஹித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 124 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஆடிய நிலையில் அவரை விட கூடுதலாக ஓர் ஆட்டத்தில் விளையாடி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்
ரோஹித் சர்மா. இந்திய வீரர்களில் அடுத்ததாக தோனி 98 ஆட்டங்களிலும் கோலி 97 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.
#Abdh