பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இளைஞர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை…!
மதம், இனம் அல்லது அரசியல் விருப்பு வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்றும், அதனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மதம், இனம் மற்றும் அரசியல் விருப்பு வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்பதையும், போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது என்பதையும் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிஷ்டவசமானது. ஏராளமான மக்கள் இறந்தது, காயங்கள் மற்றும் வீடுகளை எரிப்பது இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டிய ஒன்று அல்ல.
வன்முறையில் ஈடுபடுவதன் மூலம், நாட்டின் எதிர்காலத்தை நாம் கேள்விக்குறியாக்கிறோம் என்பதை இளைஞர்கள் எனது சொந்த பிள்ளைகள் போல் புரிந்து கொள்ளுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என குணரத்ன கூறினார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவையின் இராஜினாமாவால் நாடு தற்போது ஸ்திரமான அரசியல் நிலையில் இல்லை எனவும், மேலும் வன்முறையை தூண்டி முப்படையினரை தாக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“வாகனங்கள் தீவைக்கப்பட்டுள்ளன, வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 219 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மக்கள் இறந்துள்ளனர். இது தொடரக்கூடாது, வன்முறை தீர்வல்ல என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.