பிரையன் லாராவுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை, இந்த சாதனைகள் உடைவதால் எல்லாம் அவரது தகுதிகள் குறையபோவது இல்லை.

சச்சின் டெண்டுல்கர் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் 200 என்ற யாருமே தொடாத எல்லையை தொட்ட போது உலகமே கொண்டாடியது. அதில் சயீத் அன்வரின் வாழ்த்து முக்கியமானது. இந்த 200க்கு முன் பல வருடங்களாக அன்வரின் 194 ரன்களே அதிக பட்ச தனி நபர் ஸ்கோராக ஒருநாள் போட்டியில் இருந்தது, அதை கோவண்ட்ரி என்ற ஜிம்பாப்வே வீரர் 2009ல் 194* எடுத்து சமன் செய்தார். அடுத்த வருடமே சச்சின் அந்த ஸ்கோர் சாதனைகளை உடைத்து 200 ரன்கள் எடுத்து புது சாதனை படைத்தார். தனது சாதனையை உடைத்ததற்கு வருத்தப்படாமல் ஏன் அன்வர் சந்தோஷப்பட்டார்? ஏனெனில் சச்சின் போன்ற வரலாற்றின் சிறந்த வீரர் ஒருவர் தன் சாதனையை உடைப்பதுதான், தன் சாதனைக்கான மரியாதை என நினைத்தார். அன்வரை புண்படுத்தியது எதுவென்றால் கோவண்ட்ரி அடித்த 194*. நான் அவரை பார்த்ததில்லை, அவர் இப்படியாக எனது சாதனையை சமன் செய்தார் என்றார்கள் கேட்டுகொண்டு நகர்ந்துவிட்டேன் என்ற ரீதியில் சொல்லியிருப்பார். கோவண்ட்ரி பெரிய பேட்ஸ்மெனும் அல்ல, பெரிதாக எதுவும் சாதித்தவரும் அல்ல, அப்படிபட்ட ஒருவரே தனது பெரிய சாதனையை சமன் செய்தார் என்பது தனது சாதனைக்கான மரியாதை இல்லை என நினைத்தார், அதனால்தான் சச்சின் அதை உடைத்தபோது மகிழ்ந்தார். எந்த ஒரு சாதனையும் தகுதியானோரால் உடைக்கப்படும் போதுதான் மரியாதை, அதை உலகம் கொண்டாடும். அல்லது பிற்காலத்தில் அவர்கள் தங்களை தகுதியானவர் என்று நிரூபிக்கவாவது வேண்டும்.

ரெண்டாவது அரசியல் எந்த சாதனையும் யாரை எதிர்த்து படைக்கிறார்கள் என்பதிலும் மரியாதை உள்ளது. லாரா அடித்த 400, பலமான இங்கிலாந்து நொந்து போன வெஸ்ட் இண்டீசை முந்தைய டெஸ்ட்டில் புரட்டி போட்ட பின்னர், அடுத்த டெஸ்ட்டில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், அவ்வளவு எளிதாக என் அணியை நீங்கள் தோற்கடிக்க முடியாது என லாரா உறுதியோடு ஆடி இங்கிலாந்தை நோக செய்த இன்னிங்க்ஸ். அதை கத்துகுட்டி அணி போல திக்கு தெரியாமல் நிற்கும் பாவபட்ட அணியான ஜிம்பாப்வேக்கு எதிரால 400 அடித்து உடைப்பதை விட அநீதி இருக்கவே முடியாது. உலகம் அதை சாதனையாக பார்க்காது பச்சபுள்ளைய அடிச்சிட்டு பேச்சப்பாரு என்று யோசிக்கும், நகைக்கும். முல்டர் புத்திசாலித்தனமாக 367இல் டிக்ளேர் செய்து இந்த இக்கட்டில் இருந்து தப்பிவிட்டார். இனி வரலாறு, இவர் சொன்ன லாராவுக்கு மரியாதை எனும் காரணம் கேட்டு பூரித்து கொண்டாடும். அதோடு தான் தகுதியானவன் என நிரூபிக்க இனி வருடமெல்லாம் அதிக ரன்களை எடுக்க வேண்டும், அப்போதுதான் இந்த மரியாதையை தக்க வைக்க முடியும். ஆனாலும் 300+ அடிப்பது எளிதல்ல, எந்த அணியோடு என்றாலும், அதற்கு நமது பாராட்டுக்கள். ஆனால் பிரையன் லாராவுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை, இந்த சாதனைகள் உடைவதால் எல்லாம் அவரது தகுதிகள் குறையபோவது இல்லை.

Previous articleதிருகோணமலையிலிருந்து தேசிய கால்பந்து அணிக்கு 🔥