பும்ராவுக்கு ஐசிசி வழங்கிய கவுரவம்.. கேப்டன் ரோகித் சர்மாவையும் பின்னுக்கு தள்ளினார்

பும்ராவுக்கு ஐசிசி வழங்கிய கவுரவம்.. கேப்டன் ரோகித் சர்மாவையும் பின்னுக்கு தள்ளினார்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 4.17 எக்னாமியை வைத்திருந்தார். இதன் மூலம் இந்த தொடரின் நாயகன் விருதை பும்ரா கைப்பற்றினார்.

இந்த சூழலில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து, ஐசிசி இந்த மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதை வழங்கும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இந்திய வீரர் பும்ரா, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமதுல்லா குர்பாஸ் ஆகியோர் போட்டி போட்டனர்.

இந்த சூழலில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பும்ரா இறுதிப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசி வெறும் 18 ரன்களை விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பும்ராவுக்கு ஐசிசி யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் கிடைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பும்ரா, ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது கிடைத்ததை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இது எனக்கு கிடைத்த ஸ்பெஷல் கௌரவமாக நினைக்கின்றேன். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுக்கு பிறகு இந்த விருது கிடைத்திருக்கிறது.

ஒரு அணியாக நாங்கள் இந்த வெற்றியை கொண்டாடினோம். எனினும் தனிப்பட்ட முறையில் இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியை கொடுக்கின்றது. எங்கள் அணிக்காக நான் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையை வென்றதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்த விருதுக்கு போட்டியில் இருந்த என்னுடைய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் குருபாஷுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருது எனக்கு கிடைத்தது நினைத்து நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் என்னுடைய குடும்பம் மற்றும் சக அணி வீரர்கள் பயிற்சியாளர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய ஆதரவு தான் என்னை மேன்மேலும் உழைக்க தூண்டுகிறது என்று பும்ரா கூறியுள்ளார்.