பும்ரா இந்த பரீட்சையில் தோல்வி அடைந்தால் அணியில் இடமில்லை.. சாம்பியன்ஸ் டிராபி ஆட முடியாது

பும்ரா இந்த பரீட்சையில் தோல்வி அடைந்தால் அணியில் இடமில்லை.. சாம்பியன்ஸ் டிராபி ஆட முடியாது

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் பும்ராவின் பெயர் இடம் பெற்று இருந்தாலும் அவர் விளையாடுவது உறுதியாகவில்லை எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்துப் பார்க்க தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. அவருக்கு ஒரு பரீட்சை நடத்தப்பட உள்ளது.

அந்த பரிசோதனையில் பும்ரா தேர்ச்சி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியும். இல்லையெனில் அவருக்கு பதில் மாற்று வேகப் பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. அந்த ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பும்ராவை விளையாட வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

ஏனெனில், தற்போது காயத்தில் இருக்கும் பும்ராவால் முழு அளவில் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச முடியுமா? என்பதை ஒரு சர்வதேச அளவிலான போட்டியில் பரிசோதித்துப் பார்த்த பின்னரே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை விளையாட வைக்க வேண்டும் என தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவர் குழு ஆலோசனை அளித்து உள்ளது.

அதனால், தற்காலிகமாக பும்ராவின் பெயரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒருவேளை பும்ராவால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களையும் முழுமையாக வீச முடியாமல் போனாலோ, பாதியில் வலி ஏற்பட்டு விலகினாலோ அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்.

அவருக்கு பதிலாக மாற்று வேகப் பந்துவீச்சாளரை இந்திய அணி தேர்வு செய்யும். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் வேகப் பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பும்ராவும் இடம் பெற்று இருக்கிறார். பும்ரா நீக்கப்படும் பட்சத்தில் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.