பொதுநலவாய விளையாட்டு- இலங்கை கூடைப்பந்து அணியில் யாழ், கொழும்பு தமிழ் வீரர்கள்…!

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கூடைப்பந்து அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஷிம்ரன் யோகானந்தன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஆர்னோல்ட் ப்ரெண்ட் தேவகுமார் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

22 வயதுடைய இந்த இரண்டு இளம் வீரர்களும் அண்மைக்காலமாக இலங்கை கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களாவர். அதேபோல, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழா கூடைப்பந்து போட்டியானது 3×3 வடிவில் நடைபெறவுள்ளதால் இந்த 2 வீரர்களும் இலங்கை அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்திலும், ஒருசில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஷிம்ரன் யோகானந்தன்.

ஷிம்ரன் யோகானந்தன்

2018இல் பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் அதே ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதின்கீழ் ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரிலும் ஷிம்ரன் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், ஆரம்ப காலத்தில் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரராகத் திகழ்ந்தார். எனினும், தரம் 7 அல்லது தரம் 8இல் இருக்கும் போது ஜிம்னாஸ்டிக் விளையாட்டை கைவிட்டு அவரது பாடசாலையில் பிரதான விளையாட்டாக விளங்கிய கூடைப்பந்து விளையாட்டில் தன்னுடைய அவதானத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இதனிடையே, 2018ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஒரு சிநேகப்பூர்வ கூடைப்பந்து போட்டியொன்றில் யாழ்ப்பாணம் கூடைப்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷிம்ரன் பங்குகொண்டார்.

இதன்போது அவரது திறமையை அவதானித்த இலங்கை கூடைப்பந்து அணியின் தற்போதைய முகாமையாளரான அஜித் குருப்பு, ஷிம்ரனை இலங்கை தேசிய கூடைப்பந்து அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

அதே ஆண்டு தான் முதல் தடவையாக பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணிக்காக அவர் விளையாடியிருந்தார். அத்துடன், 2018இல் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதின்கீழ் ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரிலும் ஷிம்ரன் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். குறித்த இரண்டு தொடர்களிலும் இலங்கை அணி முறையே 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பிடித்து அசத்தியது.

எனவே, இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக ஷிம்ரனுக்கு பொதுநலவாய விளையாட்டு விழாவைப் போன்ற மிகப் பெரிய போட்டித் தொடரொன்றில் முதல் தடவையாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு கூடைப்பந்து வீரர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

பல்வேறு கஷ்டங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிற்சிகளை முன்னெடுத்து தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் கொழும்புக்கு வந்து தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த ஷிம்ரன், இம்மாத இறுதியில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதித்துள்ளார்.

ஆர்னோல்ட் ப்ரெண்ட்

அண்மைக்காலங்களில் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியில் முன்கள வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற மற்றுமொரு தமிழ் வீரர் தான் ஆர்னோல்ட் ப்ரெண்ட் தேவகுமார்.

கொழும்பு – கொட்டாஞ்சனையைப் பிறப்பிடமாகக் கொண்ட 22 வயதான ஆர்னோல்ட், தனது ஆரம்ப கல்வியை கொட்டாஞ்சனை புனித பெனெடிக் கல்லூரியில் மேற்கொண்டார்.

பாடசாலைக் காலத்தில் கூடைப்பந்து விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த ஆர்னோல்ட், க.பொ.த சாதாரண தரம் வரை குறித்த கல்லூரியில் கல்வியை முன்னெடுத்தார்.

அதன்பிறகு சிறப்பு புலமமைப்பிரிசில் ஒன்றின் மூலம் கொழும்பு ஏஷியன் சர்வதேசப் பாடசாலையில் உயர்தர கல்வியை மேற்கொண்டார். இவையனைத்துக்கும் காரணம் கூடைப்பந்து வீரராக அவர் வெளிப்படுத்திய திறமை தான்.

2016இல் இலங்கை கனிஷ்ட கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த அவர், 2017ஆம் ஆண்டு இலங்கை தேசிய கூடைப்பந்து அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.

இதனையடுத்து 2018இல் பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணிக்காக அவர் விளையாடியிருந்தார்.

அத்துடன், அதே ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதின்கீழ் ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரிலும் இலங்கை அணியில் இடம்பிடித்த ஆர்னோல்ட், குறித்த தொடரில் இலங்கை அணியின் தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவரது சகோதரான கிளிண்டன் ஸ்டெல்லோன் தேவகுமார் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் தலைவராக உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, சிறுவயது முதல் தனது சகோதரனை முன்மாதிரியாகக் கொண்டு கூடைப்பந்து விளையாட்டை தெரிவு செய்த ஆர்னோல்ட், கடந்த 6-7 ஆண்டுகளாக இலங்கை தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து தனது பங்களிப்பினை வழங்கியதோடு மாத்திரமல்லாது திறமைகளையும் வெளிப்படுத்தி ஒரு அனுபவமிக்க வீரராக மாறிவிட்டார்.

எவ்வாறாயினும், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை கூடைப்பந்து அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ள ஆர்னோல்ட், இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இது இவ்வாறிருக்க, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை கூடைப்பந்து அணியின் பயிற்சியாளராக சிவசக்தி செல்வராஜா செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கூடைப்பந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டவர் இவர், கொழும்பைச் சேர்ந்தவராவார்.

ஆகவே, ஷிம்ரன் மற்றும் ஆர்னோல்ட் உள்ளிட்ட இலங்கை கூடைப்பந்து அணி இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் சிறப்பாக செயல்பட்டு இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

நன்றி -Thepappere

photo credit-the pappare

 

 

 

Previous article100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்..!
Next articleஆசிய கோப்பை மீண்டும் இலங்கையில்- துரித ஏற்பாடுகள் முன்னெடுப்பு…!