சென்ற ஆண்டு, ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நின்று தன்னை நடுரோட்டில் நெட்டித் தள்ளி உலகின் முன் இந்த தேசத்தை தலைகுனிய வைத்தவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்து, உலக அரங்கில் அதே தேசத்தை தலைநிமிர வைத்திருக்கிறார் வினேஷ் போகட்.
அதுவும் சாதாரண வெற்றியல்ல. மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, உலகளாவிய போட்டிகளில் இதுவரை தோற்கடிக்கப்படாமல் 82-0 எனும் சாதனையை கொண்டிருந்த, உலகின் நம்பர் ஒன் வீரரை முட்டித் தூக்கி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வரலாற்று வெற்றி.
மற்றவர்களைப் போல் அவர் வெல்ல வேண்டி இருந்தது எதிரில் நின்ற பிறநாட்டு வீரர்களை மட்டுமல்ல. சொந்த நாட்டு அரசியலை. அவமானத்தை. அதிகாரத்தை. பிரிவினையை. அள்ளி வீசப்பட்ட அவதூறுகளை. டெல்லி வீதிகளில் இருந்து நாளை ஒலிம்பிக் மேடை வரையிலான வினேஷ் போகட்டின் பயணம் அசாத்தியமானது. எத்தனை நெஞ்சுரமும் வேட்கையும் இருந்தால் அந்த வலிகளையெல்லாம் இப்படி வெற்றிகளாய் மாற்ற முடியும்?
அலைக்கழிக்கப்பட்ட தன் போராட்டத்தின் காயங்களை எல்லாம் முஷ்டிக்குள் வைராக்கியமாய் மடித்து வைத்து எதிரியின் மேல் பிரயோகித்தால் அன்றி இது சாத்தியப்படுமா? இனி அவரது ஒலிம்பிக் வெற்றி குறித்து எழுதப்படும் போதெல்லாம், சென்ற ஆண்டு அவருக்கு நடந்த அநீதியும், அதை நிகழ்த்தியவர்கள் கதையும் எழுதப்படும் தானே? இதுதானே தங்கம்?!
இனி ‘இந்தியாவின் மகளே’ என்று இவரை தூக்கி வைத்துக் கொண்டாட அதே குற்றவாளிகள் வெட்கமின்றி தேசக் கொடியுடன் வரக்கூடும். அப்போது அவர்களை நோக்கித் துப்ப இப்போதிருந்தே எச்சில் சேர்த்து வையுங்கள்.
✍️ Jeyachandra Hasmi