மனுஷங்களே இல்லை.. இந்திய அணியில் சிஎஸ்கே கேப்டனுக்கு நடக்கும் விஷயம்.. உண்மையை உடைத்த ஹர்ஷா போக்ளே

மனுஷங்களே இல்லை.. இந்திய அணியில் சிஎஸ்கே கேப்டனுக்கு நடக்கும் விஷயம்.. உண்மையை உடைத்த ஹர்ஷா போக்ளே

இந்திய கிரிக்கெட் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றால் இந்த இந்திய அணி வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்து இருக்கிறது என அதிரடியாக கூறி இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே.

அதாவது, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற சிறப்பாக கிரிக்கெட் ஆடும் மனிதருக்கு இடம் இல்லை என்றால் இந்த இந்திய அணி மனிதர்களைக் கொண்ட அணி அல்ல, வேற்று கிரகவாசிகளை கொண்ட அணி என்கிற அர்த்தத்தில் அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். அவரது பேச்சு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகப்பெரிய அளவில் தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். அது மட்டும் இன்றி ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வருகிறார். அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஃபார்ம் அவுட் ஆகவில்லை.

இதுபோல நிலையாக நீடித்து ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய இடத்தை அடைவார்கள். உதாரணத்திற்கு விராட் கோலி, ராகுல் டிராவிட், சமீபத்தில் டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவித்து வருவார்கள். ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பார்கள்.

அதே போன்று ஒரு தொடரின் பெரும்பாலான போட்டிகளில் நிலையாக ரன் குவிக்கும் திறன் கொண்ட ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை மாற்று வீரராக தேர்வு செய்யவில்லை. உலகக் கோப்பைக்கு பின் நடந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் ருதுராஜ் இடம் பெற்றார். அந்த தொடரில் மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெற்ற, அவர் மூன்று போட்டிகளில் 133 ரன்கள் எடுத்திருக்கிறார்.

அதிலும் ஒரு முறை 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்த அவர், மற்றொரு போட்டியில் 28 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150க்கும் மேல் இருந்தது. இப்படி ஒரு செயல்பாட்டை செய்து காட்டியும் அவருக்கு அடுத்து நடக்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்க மாட்டார் என கூறப்படுகிறது. ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இருப்பதால் அவருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற நிலை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி ஹர்ஷா போக்ளே கூறுகையில், “நீங்கள் திடீரென எங்கிருந்தோ வந்து ருதுராஜ் கெய்க்வாட் கடந்த மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடியதை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றால், இந்த இந்திய அணி வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்தது என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணியில் துவக்க வீரராக ஆடி வரும் சுப்மன் கில்லுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர் டி20 போட்டிகளில் திருப்திகரமாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மந்தமாகவே உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் அவரை விட சிறப்பாக ஆடியும் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹர்ஷா போக்ளே சொல்வது போல ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்றால், இந்த இந்திய அணி மனிதர்களால் ஆனது அல்ல என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.