மும்பை இந்தியன்ஸ் வெற்றியால் கண்ணீர் விட்டு கதறிய டெல்லி வீராங்கனை மாரிசான்.. என்ன நடந்தது?

மும்பை இந்தியன்ஸ் வெற்றியால் கண்ணீர் விட்டு கதறிய டெல்லி வீராங்கனை மாரிசான்.. என்ன நடந்தது?

2025 மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதை அடுத்து அந்த அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் மாரிசான் காப் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இந்த போட்டியில் மாரிசான் காப் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தனியாக தாங்கி பிடித்து இருந்தார். ஆனாலும், அந்த அணி தோல்வி அடைந்தது. அதை ஏற்க முடியாமல் மாரிசான் காப் அழுத காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது மாரிசான் காப் நான்கு ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தார். அவரது பவுலிங் செயல்பாடு அனல் பறக்க விட்டது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேப்பிடல்ஸ் அணி துரத்தியபோது விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே ஆறாம் வரிசையில் இறங்கிய மாரிசான் காப் 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். ஐந்து ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.

எனினும் மற்றவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து 35 வயதான மாரிசான் காப் தோல்வியை ஏற்க முடியாமல் அழுதார். அவரை சகவீராங்கனைகள் சமாதானம் செய்தனர்.

மகளிர் ஐபிஎல் தொடர் மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற நிலையில் மூன்று முறையும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முன்னேறி இருந்தது. அதுவும் லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து நேரடியாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், முதல் இரண்டு ஆண்டுகளைப் போல இந்த முறையும் அந்த அணி தோல்வி அடைந்தது.

Previous articleநியூசிலாந்து மகளிர் வெற்றி..!
Next articleஉம்ரான் மாலிக் காயம்-IPL2025