யாரிந்த பிராங்கோயிஸ் பாfப் டூ பிளிசிஸ்-விரிவான அலசல்…!

யாரிந்த பிராங்கோயிஸ் டூ பிளிசிஸ்?

தென் ஆப்பிரிக்காவின் பிரட்டோரியாவில் 1984 ல் பிறந்த பிராங்கோயிஸ் டூ பிளிசிஸ் என்ற பாப் டூ பிளிசிஸ் ஆகிய பிரபல கிரிக்கெட்டர் பற்றியதுதான் இந்தக் கட்டுரை!

பாஃப்பின் மூன்றாவது வயதோடு அவரது பெற்றோர்கள் பிரிய, அவர் தனது தாயின் வளர்ப்பில்தான் வளர்ந்தார். தன் ஆரம்பிக்கல்வியை பிரட்டோரியாவிலுள்ள ஆப்பிரிக்கான்ஸ் பள்ளியில் படிக்கிறார். அங்குதான் அவர் தன் வாழ்க்கையில் முக்கிய முடிவொன்றை எதிர்காலத்தில் எடுப்பதிற்குக் காரணமாக இருக்கப்போகும் ஒருவரோடு நட்பாகிறார். அவர் வேறு யாருமல்ல எந்த நாட்டு கிரிக்கெட் இரசிகருக்கும் பிடிக்கும் ஏ.பி.டிவிலியர்ஸ்தான் அவர்!

பள்ளிக்காலத்திலிருந்தே பாஃப் விளையாட்டிற்கான நபராகத்தான் வளர்கிறார். ஒரே நேரத்தில் ரஃபி, கிரிக்கெட் என இரண்டும் அவரது ஆரம்பக்காலத்தில் இடம்பிடிக்கிறது. ஆனால் தன் பதினைந்தாவது வயதில், அவருக்குக் கிரிக்கெட்டா? ரஃபியா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாக, அப்பொழுதுதான் தன்னோடு கிரிக்கெட் ஆடும், தன் பள்ளி நண்பன் ஏ.பி.டி வழியில் கிரிக்கெட் ஆடுவோமென்று ரஃபியை துறக்கிறார். இவரது தந்தை தேசிய ரஃபி அணி வீரர்!

அதற்குப் பிறகு கிரிக்கெட்டையே தன் வாழ்க்கைக்கான அடிப்படையாக எடுத்துக்கொண்டு, உள்ளூர் கிளப் டைட்டன்ஸில் நுழைந்து முதல் ஆட்டத்தில் இரட்டைச் சதம், அடுத்த மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து சதங்களென பிரமாதப்படுத்துகிறார்.

இந்த நிலையில்தான் அவரின் திறமையறிந்து இங்கிலாந்தின் கவுண்டி கிளப்பான நாட்டிங்காம்ஷயரில் விளையாட கோல்டு-பேக் வாய்ப்பு வருகிறது. அதாவது பத்து ஆண்டுகளில் சம்பாதிப்பதை மூன்று ஆண்டுகளில் சம்பாதிக்கலாம். ஆனாலும் பாஃப் மறுத்து விடுகிறார். இத்தனைக்கும் அவருக்கு தென்ஆப்பிரிக்காவின் அதிகாரப்பூர்வ உள்நாட்டு அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. அவரது மறுப்பிற்கான காரணம், வாய்ப்பை ஏற்றால் மூன்று வருடம் எந்த அணிகளுக்காகவும், தென்ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட விளையாட முடியாது. தென்ஆப்பிரிக்க அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதுதான் பாஃப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஸ்டிராஸ், பீட்டர்சன் போன்றவர்கள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்காக விளையாடியது முன் உதாரணமாய் இருந்தாலும் பாஃப் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை.

ஒருபுறம் வயது 21 ஆகிறது. இன்னொரு புறம் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் உள்நாட்டு அணிகளிலும் பெரிய வாய்ப்பில்லை. இப்படியான சூழலில்தான் 2004-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்க தேசிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பவுச்சருக்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டிருக்க, தன் நண்பனான ஏ.பி.டிக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் காலிஸ் போன்ற மிடில் ஆர்டர் இருக்கும் அணியில், மிடில் ஆர்டரில் விளையாடும் பாஃப்பிற்கு வாய்ப்பென்பது குதிரைக்கொம்பு அப்போது. ஓபனராகவோ, விக்கெட் கீப்பராகவோ இல்லை பவுலராகவோ கூட ஆகியிருக்கலாம் என்று பாஃப் அப்போது நினைத்திருக்கக் கூடும்.

ஆண்டுகள் மூன்று அப்படியே உருள்கிறது. ஒருபுறத்தில் தன் நண்பன் ஏ.பி.டி சர்வதேச கிரிக்கெட் தென்ஆப்பிரிக்க அணிக்காகத் தொடர்ந்து விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறான். ஆனால் இவருக்கோ, உள்நாட்டு போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், தேசிய அணி தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப முடிவதில்லை.
இதெல்லாம் சேர்ந்து பாஃப்பை மெல்ல மெல்ல விரக்தி திங்க ஆரம்பிக்கிறது. ஒருபுறம் கிடைத்த பெரிய வாய்ப்பை நாட்டிற்காக உதறியதால் சில ஏளன பேச்சுகள் வேறு மனக்காயத்தை அதிகப்படுத்த ஆரம்பித்திருந்தது. ஆனால் பள்ளிக்காலத்திலிருந்தே நண்பரான ஏ.பி.டிக்கு இவரது திறமை நன்றாகவே தெரியும். அதனால் தொடர்ந்து பாஃப்க்கு நம்பிக்கை மொழிகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

எது எப்படி என்றாலும், திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், தன் நெருங்கிய நண்பன் அதேதுறையில் வாய்ப்பைப் பெற்று சாதிக்க, வந்த நல்ல வாய்ப்பையும் நாட்டிற்காக உதறிவிட்டும், ஊரார் அறிவுரைகள், மறைமுக ஏளன பேச்சுக்களைப் தாண்டி ஒருத்தன் நிற்பதை விட, அந்தச் சூழலைச் சந்திப்பதே அவ்வளவு இரணமானது. ஆனால் பாஃப் அதையும் சகித்து, திறமையை மட்டுமே நம்பி கடந்திருக்கிறார். பாஃப் சாதனையில் முக்கியச் சாதனை இதுவென்றுதான் சொல்வேன். இந்தச் சூழலில் இளமைக்காலத்தில் இருந்த, இருக்கின்ற இளைய வயதினர்களுக்கு இதன் வலியை முழுமையாய் உணர முடியும்!

பாஃப்பின் கிரிக்கெட் கேரியரில் முதல் முறையாய் ஒரு நல்ல விசயம் நடந்தது என்றால் அது 2008 ஆம் ஆண்டுதான். அப்பொழுது பாஃப் வயது ஏறக்குறைய 25. இங்கிலாந்து கவுண்டி கிளப்பான லங்காஷையர், நல்ல பணம் கொடுப்பதாய் ஒரு ஒப்பந்தத்தோடு வருகிறது. அதாவது பாஃப் ஆறுமாதம் கிளப்பிற்காகவும், ஆறுமாதம் உள்நாட்டு போட்டிகளுக்காகவும் ஆடிக்கொள்ளலாம் என்று அதில் சொல்லப்படுகிறது. உள்நாட்டில் ஆடினால்தான் தேர்வாளர்களை ஈர்க்க முடியும், அதற்கு ஒப்பந்தம் வழிசெய்வதால் பாஃப் மகிழ்ச்சியாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

ஆனாலும் அந்த மகிழ்ச்சி மகிழ்ச்சியாய் அமையவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகளிலும் தேசிய அணியின் கதவில் பாஃப் சம்பந்தமாய் சிறு அசைவுக்கூட இல்லை. இத்தனை விரக்தியையும் தாங்கிக்கொண்டு இங்கிலாந்தில் லங்காஷையருக்காகவும், தென்ஆப்பிரிக்காவில் நார்த்தன்ஸ், தென்ஆப்பிரிக்க A அணியிலும் விளையாடி வருகிறார். இந்த நான்கு ஆண்களில் அவரது நண்பரான ஏபிடி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறியிருக்கிறார்!

இந்த நான்கு ஆண்டுகளிலும் வெளிநாட்டு, உள்நாட்டு போட்டிகளில் ரன்களை தொடர்ந்து குவித்து வந்த அவருக்கு 2011-ஆம் ஆண்டுதான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உள்நாட்டில் வாய்ப்பு வருகிறது. அந்தப் போட்டியில் 60 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்திருந்தாலும் தொடர்ந்து பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. அவர் கனவான டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கவில்லை!

2011 ஜனவரி தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கிடைத்த அதே ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாஃப் வாங்கப்படுகிறார். இதில் கிடைத்த வாய்ப்பை விட, அவர் அடைந்த வேதனைதான் அதிகம். அவரை விட ஏ.பி.டிக்குதான் அந்த வேதனை அதிகம்!

அந்த ஆண்டு IPL சீசனின் ஒரு போட்டியில் கூட பாஃப் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதைவிட பாஃப்பையும் ஏபிடியையும் வேதனையடைய வைத்த ஒரு நிகழ்வு, அந்த சீசனின் இறுதிப்போட்டியில் சென்னையும் பெங்களூரும் மோதிக்கொள்ளும் போது நடந்தது. தன் திறமையான நண்பன் பாஃப் தண்ணீர் புட்டியையும், வாழைப்பழத்தையும் தன் அணி வீரருக்காகத் தூக்கிக்கொண்டு வரும்போது, அதைப் பார்க்க, அந்தச் சூழலை சந்திக்க முடியாமல் கலங்கி, ஏபிடி வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டாராம். ஏபிடியால் தாங்கிக்கொள்ள முடியாத தன் துயரங்களைக் கூட பாஃப் அமைதியாய் கடந்திருக்கிறார். அவரின் அத்தனை சகிப்பிற்கும் பின்னாலும் இருந்தது, அவரின் திறமை மீதான அவரது நம்பிக்கை!

இறுதியாய் அவர் யாரென்று இந்த உலகம் அறிவதற்கான ஒரு அறிவிப்பு 2012-ன் இறுதியில் நவம்பரில் வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்த தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்கிடைத்த அறிவிப்பு அது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் டிரா ஆகியிருக்க, இரண்டாவது போட்டிக்கான ஆடும் அணியிலும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அவருக்கான போட்டி அத்தனை சுலபமாய் ஆரம்பிக்கவில்லை. பேட்டை எடுத்துக்கொண்டு களத்திற்குப் புறப்பட்டவரின் கால்கள் படியில் இடித்து காலணி கழன்று விழுகிறது. Pad திரும்பிக்கொள்கிறது. ஆஸ்திரேலியர்கள் எதிரணியின் அறிமுக வீரருக்குத் தரும் வரவேற்பு அவ்வளவு மோசமானதாய் இருக்கும். இந்த நிலையில் பாஃப்ற்கு இதுவேறு. பாஃப் அந்தக் கூட்டத்தின் முன் அமைதியாக மண்டியிட்டு தன் காலணியின் கயிற்றைக் கட்டுகிறார். இரசிகர்களின் கேலி எல்லையைக் கடக்கிறது. பாஃப்பிற்கு இதெல்லாம் பழக்கமாகி இருந்தாலும், அந்த நிகழ்வு சற்றுப் பாதிக்க, எழுந்து உறுதியோடு இப்பொழுது நடக்க ஆரம்பிக்கிறார்!

ஆனால் அதற்கு முன்னால் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் கிளார்கின் இரட்டைச் சதம், வார்னர், மைக் ஹஸ்ஸின் சதங்களோடு குவித்திருந்த ரன்கள் 550. இதை வெறும் 107.2 ஓவர்களில், ஒரு ஓவருக்கு 5.12 என்ற ரன்ரேட்டில் வெளுத்திருந்தனர். எதிரணியின் பவுலர் மட்டுமல்ல பேட்ஸ்மேன் வரை மனமொடியும் அசுரத்தனமான டெஸ்ட் பேட்டிங் தாக்குதல் இது!

ஆனால் மனம் தளராத கேப்டன் ஸ்மித் சதமடிக்க, ஆறாவது வீரராய் அறிமுகப்போட்டியில் களமிறங்கிய பாஃப் அரைசதமடித்து ஆட்டமிழக்கிறார். தென்ஆப்பிரிக்கா இறுதியில் 338 ரன்களை அடித்து 162 ரன்கள் பின்தங்குகிறது. அந்த இன்னிங்ஸில் ஏபிடி அடித்தது 1 ரன். அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸி 70 ஓவர்களில் 267/8 என டிக்ளேர் செய்ய, தென்ஆப்பிரிக்காவுக்கு இப்போது இலக்கு 430. ஒன்று இலக்கை அடிக்க வேண்டும் இல்லையென்றால் தோற்க வேண்டும் அப்படிப்பட்ட ஆட்டம் இது. ஏனென்றால் ஏறக்குறைய ஒன்றே முக்கால் நாளுக்கு ஆடியாக வேண்டும். நான்காம், ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் இது சாத்தியமில்லை. ஆஸி வென்றுவிட்டதாய் கிரிக்கெட் அறிந்தவர்கள் நினைத்திருந்த போட்டி இது!

இதற்கேற்றார் போலவே 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் காலி. காலிஸ்க்கு சிறிய காயம் ஏற்பட்டிருக்க ஐந்தாவது விக்கெட்டுக்கு தன் நெருங்கிய நண்பன் ஏபிடி உடன் ஆட வருகிறார் பாஃப். புதியதொரு ஆட்ட சரித்திரம் உருவாக ஆரம்பிக்கிறது. பாஃப் யாரென்று அந்த ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவர்கள் முடியும் போதும், அதுவரை பாஃப்பை அறியாதவர்களுக்குத் தெரிய வருகிறது.

ஏபிடி புதியதொரு பரிணாமத்தில், தன் நண்பனுக்காகவே ஆடுவதைப்போல், 220 பந்துகளில் 33 ரன்களை அடித்து அவுட்டாகிறார். ஏபிடி-யின் விக்கெட் என்பது அவ்வளவு சாதாரணமாய் கிடைக்கக் கூடிய ஒன்றில்லை என்று கிரிக்கெட் உலகம் அறிந்த நாள் அன்று!

அடுத்து காலிஸ் 110 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டாகிறார். அடுத்து 28 பந்துகளை ஆடி ஸ்டெயின் ரன் இல்லாமல் அவுட் ஆகிறார். ரோரி 17 பந்துகள் ஆடி அவுட்டாகிறார். மார்க்கெல் வந்து 12 பந்துகளை ஆட, பரபரப்பான அந்த ஆட்டம் டிராவில் முடிகிறது. தென்ஆப்பிரிக்கா 248 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழக்கிறது.

ஒரு முனையில் பாஃப் 446 நிமிடங்கள் களத்தில் நின்று 376 பந்துகளைச் சந்தித்து ஆட்டத்தை டிராவில் முடித்ததோடு, அறிமுகப் போட்டியில் சதமும் அடித்து 110 ரன்களோடு களத்தில் கம்பீரமாய் நிற்கிறார். அதிரடியாய் ஆடி மனமொடித்த ஆஸி பேட்ஸ்மேன்களை, அதீத நிதானத்தில் ஆடி அலறவிட்ட பாஃப்-ஏபிடி ஜோடியை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். பெவிலியனில் இருந்து ஆட வந்தபோது கேலி செய்த இரசிகர் கூட்டம், ஆட்டத்தை டிராவில் முடித்து பெவிலியன் திரும்பும் போது எழுந்து நின்று கைத்தட்டி பாஃப்புக்கு ஆரவாரம் செய்கிறது!

யோசித்துப்பாருங்கள் எத்தனை மனத்துயரங்கள், விரக்திகளைத் தாண்டி வந்த பாஃப்க்கு இந்த நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும்? தன் நண்பன் இறுதியாகத் தன்னை யாரென்று நிரூபித்துச் சாதித்து விட்டதையும், அதில் தானும் பங்குப் பெற்றிருப்பதையும் உணர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஏபிடிக்கு எப்படி இருந்திருக்கும்?!!! ஒவ்வொரு மனிதனும் உலக மேடையேறி “நான் யார் தெரியுமா? இதுதான் நான்!” என்று சொல்லத்தானே எல்லாவிதமான மனித ஓட்டங்களும், பாடுகளும்?!!! அவன் ஓட்டங்களுக்கும் பாடுகளுக்கும் இப்பொழுது ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது!

சென்னை அணியால் தன்னை ஏலத்தில் வாங்க முடியாத பொழுது, பாஃப் பேசி வெளியிட்டிருந்த காணொளியில் வெளிப்படும் மெல்லிய துயரம், ஆடிய அணியை இழந்துவிட்டோம் என்பதற்கானது மட்டுமல்ல, ஒரு பெரிய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைப்பதும், ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பதும் எவ்வளவு பெரிய கடினமென்று உணர்ந்தவனின் தவறவிட்ட வலி அது. சாதித்த பின்னாலும் கூட சென்னை அணியில் 2018 சீசனில் ஆடுவதற்குப் பெரிய வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறார் பாஃப்!

“நான் தொடர்ந்து விளையாடுவதற்கு உள் உந்துசக்தியாக எந்தக் காரணங்களும் இல்லை” என்று கூறி நேர்மையாய் ஓய்வு பெற்றாரே ஏபிடி, அதுபோல பாஃப்பால் முடியாது. ஏனென்றால் பாஃப் இன்னும் அவர் திருப்தியடையும் அளவுக்கு விளையாடி முடிக்கவில்லை. பாஃப்பை பொறுத்தவரை சர்வதேச தர ஆட்டங்களில், அவர் உடல் ஒத்துழைத்தால் 45 வயது வரைக்கூட விளையாடுவார். கிரிக்கெட்டில் அவர் அவ்வளவு மீதம் வைத்திருப்பதாய் உணர்கிறார்!

பல ஏமாற்றங்கள், அவமானங்கள், விரக்தியைக் கடந்து கிடைத்த ஒன்றை, அடைந்த ஒருவன் எப்படி நேர்த்தியாய் பத்திரமாய் வைத்துக்கொள்வான் என்பதற்கு, நேற்று பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பாஃப் ஆடிய ஆட்டமே நல்ல உதாரணம்!

#Richards