யாரு சாமி இவன்? மிரள வைக்கும் பவுலரை வைத்துக் கொண்டு மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ்..!

யாரு சாமி இவன்? மிரள வைக்கும் பவுலரை வைத்துக் கொண்டு மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ்

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் அந்த அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.

பும்ரா 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமின்றி மிகச்சிறந்த எகானமி ரேட்டை வைத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 6.25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதன் மூலம் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் மிக சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்து இந்த ஆண்டு இதுவரை நடந்த போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் வலம் வருகிறார்.

இப்படி ஒரு சிறந்த பந்துவீச்சாளரை வைத்துக் கொண்டுதான் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளிலும் பும்ராவே சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். அப்படி இருக்க மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டு தோல்வி அடையக் காரணம் மற்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் தான். அவர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும் ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும் ஒரு ஓவருக்கு சராசரியாக 11 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

சுழற் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், ஒரு ஓவருக்கு 9.25 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இப்படி அந்த அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி பல தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குறைந்தது 15 ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்களில் சிறந்த எக்கனாமி ரேட் வைத்துள்ள பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 6.25 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சுனில் நரைன் இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு 6.72 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.