ராகுல் டிராவிட் <3

இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலுமாக மொத்தமாக 604 தடவைகள் நான் துடுப்பாடியுள்ளேன், ஆனால் 410 தடவைகள் 50 க்கும் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்தேன். வெற்றிகளை விட அதிகமாக நான் தோல்விகளையே தழுவியுள்ளேன். ஆகவே எனக்கு தோல்விகளை பற்றிக் கதைப்பதற்கு அதிக தகுதி இருக்கின்றது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்த ஓர் கனவானிடம் இருந்து உதித்த வார்த்தைகள் இவை.
ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட்டின் பெரும் சுவர்.
24,000 சர்வதேச ஓட்டங்களையும், 48 சதங்களையும் அடித்துள்ள டிராவிட், என்றுமே தான் பெரிதாக சாதித்ததாக ஒப்புக் கொண்டதில்லை. எந்தப் போட்டியில் அவரது ஆட்டத்தை புகழ்ந்து பேசினாலும், உடனே அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மற்ற வீரர்களை அடையாளம் காட்டுவார். இதுவெல்லாம் அவரது பணிவுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
கிரிக்கெட் திறமையும், அறிவும், அடக்கமும் ,கனவான் தன்மையும் நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ❤
என் பாட்சாலைக் காலத்திலிருந்து நான் பார்த்து ரசித்த, கனவுலகில் வாழ்ந்த, நேசித்த பலநூறு கிரிக்கெட் வீரர்களுக்குள் முதன்மை இடம் இந்திய கிரிக்கெட்டின் பெரும் சுவரான ராகுல் டிராவிட்டுக்கு இருக்கிறது.
மந்த கதியில் ஆட்டத்தை ஆரம்பிப்பவர் எனும் குற்றசாட்டு இவர் அறிமுகமான காலத்தில் வெகுவாகவே இருந்தது.
ஒருநாள் ஆட்டங்களில் 30 பந்துகளில் 3 ஓட்டங்கள் பெற்று வெறுப்பேற்றியவர், பின்னாட்களில் 22 பந்துகளில் அரைசத்தமடிக்கும் எங்கள் ஆதர்ஷ நாயகனாக மாறியவர்.
கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சிகளுள் ஒன்றாக கிரிக்கெட் ரசிகர்களால் நேசிக்கப்படும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட வருமாறு இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல வைத்து, தான் யார் என்பதை காட்டிவிட்டு அசத்தலாக ஓய்வு பெற்ற ஓர் வீரர் டிராவிட்.
எத்தனையோ டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தங்களை நிரூபிக்க முடியாமல் சோடைபோனார்கள், அவர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பொருத்தமானவர்கள் என்று கிரிக்கெட் உலகம் கொஞ்சம் எட்டத்தே தள்ளிவைத்திட்ட காலத்தில் ஆமை வேகத்தில் ஆட்டத்தை ஆட ஆரம்பித்த டிராவிட், பின் நாட்களில் எவ்வாறு வளர்ந்து அசுர வேகத்தில் கிரிக்கெட் அரங்கில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார் என்பது மிகப்பெரிய வரலாறு.
அற்புதமான கவர் ட்ரைவ்கள், ஃப்ளிக் ஷாட்கள், கட் ஷாட்கள், பந்து வீச்சாளர்களையே வெறுப்பேற்றிடும் டிபென்சிவ் டெக்னிக் என்று இந்த காலத்து மொடேர்ன் டே கிரிக்கெட் வீரர்கள் பலர் டிராவிட்டிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன.
வருகின்ற பந்துகளையெல்லாம் சிக்சருக்கு விளாசுவதல்ல கிரிக்கெட், அந்த பந்தை அழகாக அளந்து, பார்த்து, ரசித்து, துடுப்பை கையாளாமலேயே அந்த பந்தை லாவகமாக கீப்பர் கைகளுக்குள் செல்ல விடுவதும் கிரிக்கெட் தான், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அணைக்க வேண்டும், எந்த பந்தை தடுக்க வேண்டும் எனும் அத்தனை மாய வித்தைகளும் நன்கறிந்தவர்.
ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் ஸ்டீவ் வோ தலைமையிலான அந்த அணியை அதிகம் சோதனைக்கு உள்ளாக்கியவர்கள் லக்ஸ்மன், டிராவிட் ஆகிய இருவருமேதான். அதனால் தான் ஒரு கட்டத்தில் ஸ்டீவ் வோ வெறுப்படைந்து சொன்னார், டிராவிட்டை களம் வந்து அரை மணி நேரத்துக்குள் அவுட்டாக்குங்கள் இல்லையேல் விட்டுவிட்டு மற்றைய வீரர்களை குறி வையுங்கள் என்று.
மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் பலர் இப்போதெல்லாம் T20 போட்டிகளின் மோகம் கொண்டு அலைகிறார்கள், ஆனால் தங்கள் தேசிய அணிகளுக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் விளையாடுவதென்றால் கிரிக்கெட் சபையோடு முண்டியடிக்கிறார்கள், கிரிக்கெட் என்றால் அது உண்மையில் டெஸ்ட் போட்டிகள் தான் என்பதிலே டிராவிட் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பயணிப்பவர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு எல்லா நாட்டு வீரர்களும் T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட பறக்கும் நேரத்தில் டிராவிட் மட்டும், வித்தியாசமானவர், விந்தையானவராக மிளிருகின்றார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்.
தான் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாவற்றையும் மொத்தமாக இளசுகளுக்கு கற்றுக் கொடுக்க புறப்பட்டு, இந்திய அணியின் இன்றைய வெற்றிகள் பலவற்றுக்கான அஸ்திவாரத்தை பலமாக இட்டவர் இந்த டிராவிட்.
இந்திய இளையோர் அணி, இந்திய A அணி, ஆகியவற்றின் பயிற்சியாளராக செயல்பட்டு பல முன்னணி வீரர்களை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்து இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் டிராவிட் கிரிக்கெட் சேவை புரிகின்றார்.
இதைவிடவும் இப்போது கிரிக்கெட் சபை தலைவராகிவிட்ட கங்குலியின் வரப்பிரசாதமும் கைகூடிவர, டிராவிட் இந்திய கிரிக்கெட்டை செதுக்குவதில், கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்திடுவதிலும் இவரை விஞ்சிட யாருமில்லையென்றாகி விட்டது.
இப்போது இந்திய கிரிக்கெட்டில் கலக்கி கொண்டிருக்கும் ஜடேஜா, இலங்கை கிரிக்கெட் அணியின் அஞ்சேலோ மத்தியூஸ்,திசாரா பெரேரா போன்றோரெல்லாம் இரண்டு இளையோர் உலக கிண்ண போட்டிகளில் ஆடியவர்கள், ஆனால் இளையோர் உலக கிண்ண போட்டிகளில் கிண்ணங்களை விட இளம் வீரர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியாவில் இளம் வீரர் ஒருவர் ஒரு இளையோர் உலக கிண்ணத்தில் மட்டுமே விளையாட முடியும் என்ற திடடத்தை அறிமுகம் செய்தவர் டிராவிட்.
2014 இளையோர் உலக கிண்ண அணியில் டிராவிட் பாசறையில் வளர்ந்து இளையோர் அணியில் ஆடிய சிரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அரங்கில் தம்மை நிலைநிறுத்தியுள்ளனர்.
2016 இல் இஷான் கிஷன் தலைமையில் , டிராவிட் பயிற்றுவிப்பில் இளையோர் உலக கிண்ணத்தில் இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் பலம்பொருந்திய இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவுகிறது.
சிம்ரன் ஹெட்மயர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி , சிம்பாவே அணியை மோசமான மன்கட் முறைமூலம் காலிறுதி போட்டியில் வெற்றிகொண்டு அதிஷ்டத்தால் இறுதி போட்டிக்குள் நுழைந்து அந்த அணி கிண்ணத்தையும் வெற்றி கொண்டு இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அந்த அணியில் விளையாடிய ஹெட்மயர், அல்சாரி ஜோசெப், கீமோ போல் போன்றோர் மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட்டில் ஜொலித்துக் கொண்டிருக்க, 2016 இந்திய இளையோர் அணியில் விளையாடிய ரிஷாப் பாண்ட்,காலில் அஹமட், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் சமகாலத்தில் இந்திய தேசிய அணியில் ஜொலிக்கின்றனர்.
வெறுமனே 145 அடித்தும் இறுதி ஓவர் வரை அந்த உலக கிண்ண போட்டி சென்றமை இன்னும் சிறப்பம்சமே, அந்தளவுக்கு டிராவிட் பயிற்றுவித்த வீரர்கள் அட்டகாசம் புரிந்தார்கள்.
இதனால் இறுதிவரைக்கும் சென்று கிண்ணத்தை கோட்டைவிடும் டிராவிட் கொஞ்சம் அதிஷ்டமில்லாதவர் எனும் பெயர் நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது, அவர் காலத்தில் இந்திய அணி உலக கிண்ணத்தை வெற்றி கொள்ளவில்லை, ஆனால் அந்த குறையை ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய இளையோர் அணி 2017 இளையோர் உலக கிண்ணத்தை ?? வென்று கொடுத்து அவருக்கு மகுடம் சூடிக்கொடுத்தது.
அந்த அணியில் விளையாடிய ப்ரித்வி ஷா, சுப்மன் கில், கமலேஷ் நாகர்கோட்டை, சிவம் மவி, இஷான் போரால், ரியான் பராக் என்று இந்திய கிரிக்கெட்டை ஆள ஆசையோடு காத்திருக்கிறார்கள் பல இளசுகள் , இவர்களையெல்லாம் செம்மைப்படுத்திய செம்மல் நமது ட்ராவிட்டே.
இந்திய A அணியிலிருந்து தேசிய அணிக்குள் நுழைந்த மாயங் அகர்வால், ஹனுமா விஹாரி,விஜய் சங்கர் , கருண் நாயர், பாண்டியா, லோகேஷ் ராகுல், சஹால் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது .
எல்லோராலும் இந்திய கிரிக்கெட்டின் பெரும் சுவரான ராகுல் ட்ராவிட்டின் துடுப்பாட்ட நுட்பங்களை பற்றி அதிகம் சிலாகிக்கப்படும் காலத்தில் இவர் ஒரு மிகப்பெரிய ஸ்லிப் பீல்டர் என்பதை நாங்கள் மறந்து விடுகின்றோம் . வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தவும், டெஸ்ட் போட்டிகளை வெற்றிகொள்ளவும் அந்த அணிகளின் ஸ்லிப் பீல்டர்கள் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்துவார்கள் என்பது கிரிக்கெட் தெரிந்தவர்கள் அறிந்திட்ட ஒரு நல்ல விடயம்.
டிராவிட், லக்ஸ்மன், சச்சின் , சேவாக் என்று வரிசையாக ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் நின்றுகொண்டு ஆட்சி செய்த காலம் அதுவும் ஒரு பொற்காலம் எனலாம், 2012 க்கு பின்னர் இவர்கள் ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற்றுக்கொள்ள இந்திய அணி ஸ்லிப் திசை களத்தடுப்பில் கோட்டை விட்டு போட்டிகளையும் தாரை வார்த்தது, அதன்பின்னர் இப்போது கோஹ்லி தலைமையில் நிமிர்ந்து வந்திருக்கிறது.
இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் அந்தளவு தூரம் அனாயசமாக ஸ்லிப் திசையில் பிடிகளை அள்ளுவதிலும் வல்லவர் டிராவிட். மொத்தமாக 210 பிடிகள்.
கங்குலியின் காலத்தில் மொஹமட் கைப்பை அணிக்குள்ளே வைத்திருக்க அதிகம் அக்கறை கொண்டவர், அதன் காரணத்தால் மேலதிக துடுப்பாட்ட வீரரை அணிக்குள்ளே கொண்டுவர வேண்டுமென்பதற்காக கங்குலிக்கு ஒத்துழைத்து விக்கெட் காப்பாளராகவும் டிராவிட் தன்னை மாற்றிக் கொண்டவர். 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 71 பிடிகளும் 13 ஸ்டம்பிங்கும் செய்தது மாத்திரமல்லாமல், அணித்தலைவர் கங்குலி இவர் மீதான நமபிக்கையில் 2003 உலக கிண்ணத்துக்கும் ட்ராவிடடையே விக்கெட் காப்பாளராக உலக கிண்ண போட்டிகளிலும் பயன்படுத்தினார்.
ஆரம்ப துடுப்பாட்ட ஸ்தானத்தில் இழுபறி நிலை எழும் தருணங்களிலும் தன்னை ஆரம்ப வீரராகவும் மாற்றிக் கொண்டு களமிறங்கி அசத்துவார், அணிக்காக தன்னையே மாற்றிக்கொண்ட ஓர் அற்புத பண்பு இவருக்கானது.
இவற்றைவிடவும் 89 IPL போட்டிகளில் 82 இன்னிங்ஸ் விளையாடினார் என்பதும் இன்னுமொரு சாதனையே, இதிலே 43 போட்டிகளில் ஆரம்ப வீரர், ராஜஸ்தான் அணி தலைவராகவும் டிராவிட் அசத்தினார்.48 போட்டிகளில் 22 வெற்றிகள்.
286 டெஸ்ட் இன்னிங்ஸ் , 31,258 பந்துகளை சந்தித்து டெஸ்ட்டில் அதிக பந்துகளை சந்தித்த சாதனை இவருக்கானது, இவர் காலத்தில் இந்தியா வெளிநாட்டு மண்களில் 15 டெஸ்ட் வெற்றிகளை பெற்றது அவற்றில் 1,577 ஓட்டங்களை 65.70 எனும் சராசரியில் குவித்தவர்.
டெஸ்ட்டில் பெற்றுக்கொண்ட 11 ஆட்டநாயகன் விருதுகளில் 8 வெளிநாட்டு மண்ணில் பெற்றுக்கொண்டவை. ஹெட்டிங்கிலே (2002), அடிலெய்டு (2003), ராவல்பிண்டி (2004) கிங்ஸ்டன் (2006) போட்டிகள் டிராவிட் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
டிராவிட் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இந்திய அணியால் மொத்தமாக 89,668 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன, அவற்றில் 35.6 வீதமான ஓட்டங்களான 32,039 ஓட்டங்கள் டிராவிட் களத்திலிருக்கும் போது பெறப்பட்டவை.
(சச்சின் 29.9, கல்லிஸ் 32.6 வீதம் )
கங்குலியின் காலத்தில் இந்திய அணி பெற்றுக் கொண்ட 21 டெஸ்ட் வெற்றிகளில் 2,571 ஓட்டங்களை 102.84. எனும் சராசரியில் 9 சதம் 3 இரட்டை சதம் அடங்கலாகவும் பெற்றுக் கொண்டவர்.
2001 கொல்கொத்தாவில் லக்ஷ்மனுடன் இணைந்து ஆசியின் தொடர்ச்சியான 16 டெச்ட் வெற்றிககளுக்கு முடிவு கட்டிய 376 ஓட்டங்கள் ,சேவாக்குடன் இணைத்து ஆரம்ப வீரராக 2006 இல் லாகூரில் பெற்றுக்கொண்ட 410 ஓட்டங்கள் இணைப்பாட்டம் எல்லாம் வரலாறு பேசும் டிராவிட் ஆட்டங்கள் எனலாம், இப்படி ஏரளாமானவற்றை பட்டியல் படுத்திக்க கொண்டே போகலாம்.
புலிக்கு பிறந்தது ஒன்றும் பூனையாகாது என்பார்கள்தானே அதே போன்று டிராவிட் எனும் புலிக்கு பிறந்த டிராவிட் மகன் இப்போது பள்ளிக் கிரிக்கெட்டில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார் என்பது அவருக்கான இன்னுமொரு மகுடம்.
இன்று கோஹ்லியை நாம் கொண்டாடுகின்றோம், முன்னர் டோணியையும், கங்குலியையும் தலையில் வைத்து தூக்கி கொண்டாடினோம் , ஆனால் என்றும் கொண்டாடவல்ல
வெறுப்போர் இல்லாத வெகு சில கிரிக்கெட் கனவான்களில் டிராவிட் எனும் மிகப்பெரிய ஜாம்பவானும் ஒருவரே ❤
இன்னுமொரு கெயில் வரலாம், மக்கலம் வரலாம், சச்சின், லாரா,சனத், சேவாக், கோஹ்லி, சங்கா, மஹேல என்று எல்லோரும் வரலாம், ஆனால் டிராவிட் போன்று ஒருவர் வந்திட முடியாது.
அவர் இந்திய கிரிக்கெட்டின் பெரும் சுவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தினதும் மாயவித்தைக்காரர்.
Happy Birthday Dravid ?
11.01.2021