ராஜஸ்தான் தோல்விக்கு காரணமே இவர்தான்.. சந்தீப் சர்மாவின் மோசமான சாதனை ஓவர்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா மிக மோசமான சாதனையை செய்தார். இந்தப் போட்டியில் அவர் முதல் மூன்று ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அவரது முதல் மூன்று ஓவர் பந்துவீச்சில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஆனால். சந்தீப் சர்மா 20 வது ஓவரில் மட்டும் 11 பந்துகளை வீசி அதிர்ச்சி அளித்தார்.
நான்கு வைடு மற்றும் ஒரு நோபாலை வீசினார். மேலும் அதிக ரன்களையும் வாரி இறைத்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. இந்த மோசமான ஓவர் ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. இதற்கு முன் மூன்று பந்துவீச்சாளர்கள் ஒரே ஓவரில் அதிக வைடு, நோ பால் வீசி மொத்தம் 11 பந்துகளை வீசி உள்ளனர்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது துஷார் தேஷ்பாண்டே 11 பந்துகளை ஒரே ஓவரில் வீசி இருந்தார். அதே 2023 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது முகமது சிராஜ் 11 பந்துகளை வீசியிருந்தார். இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர் 11 பந்துகளை வீசியிருந்தார்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவும் இந்த பட்டியலில் 11 பந்துகளை வீசி இணைந்து இருக்கிறார். ஒருவேளை சந்தீப் சர்மா இத்தனை வைடுகளையும், நோபாலையும் வீசாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏனெனில், இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 188 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் எடுத்து போட்டி சமநிலையில் முடிந்தது. அதன் பிறகு சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒருவேளை சந்தீப் சர்மா வைடு மற்றும் நோ பால்களை வீசாமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் சூப்பர் ஓவருக்கு செல்லாமல் வெற்றி பெற்று இருக்கக் கூடும்.