ரிஷப் பண்ட்டை அணியில் எந்த இடத்தில் வைப்பது? கார்த்திக், பான்ட் இருவரில் யார் அணிக்குத் தேவை ?

ரிஷப் பண்ட்டை அணியில் எந்த இடத்தில் வைப்பது?

டாப் ஆர்டர் என்றால், கேஎல் ராகுல் இல்லை விராட் கோலி வெளியே இருக்க வேண்டும். இந்திய t20 அணியின் வழக்கமான துவக்க ஆட்டக்காரரான
கேஎல். ராகுலை வெளியில் வைப்பதாக இருந்தாலும், அறுவை சிகிச்சைக்குப்பின் வந்திருக்கும் அவருக்கு வாய்ப்புகள் தராமல் வெளியில் வைக்க முடியாது. அதில்லாமல் அவர் அணியின் துணை கேப்டன். விராட் கோலியின் இடத்தில் இப்போதைக்கு வாய்ப்பே கிடையாது.

அப்படியென்றால் மிடில் வரிசையில் சூரியகுமார், ஹர்திக் பாண்டியா இருவரில் ஒருவரை வெளியில் வைத்து ரிஷப் பண்ட்டை உள்ளே வைக்க வேண்டும். இதற்கும் வாய்ப்பே கிடையாது.

ஜடேஜாவிற்கு பதில் வைக்க வேண்டுமென்றால் ஜடேஜா கூடுதலாக ஒரு இரண்டு ஓவருக்கான பௌலிங் ஆப்ஷனை தருகிறார். இதனால் இவருக்கு பதிலாகவும் வைக்க முடியாது. வைத்தால் ஐந்து பவுலர்கள் தான் இருப்பார்கள்.

அடுத்து தினேஷ் கார்த்திக். இவரின் இடத்தில் வைப்பதாக இருந்தால், ரிஷப் பண்ட் பினிஷிங் ரோலில் சராசரியாக செயல்படும் அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இப்போதைக்கு. அனுபவம், அதிக ஷாட்ஸ், பினிஷிங் ரோல் இந்தக் காரணங்களால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு தரப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா பினிஷிங் ரோல் செய்யக்கூடியவர். இவரை தினேஷ் கார்த்திக் இடத்தில் வைத்து ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட்டை விளையாட வைக்கலாம். ஆனால் ஹர்திக் பாண்டியா quick 20 ரன்களை அடிக்கும் வீரர் என்பதைத் தாண்டி, இன்னிங்சை கட்டமைத்து எடுத்துக்கொண்டுபோய் ஃபினிஷிங் செய்யும் ஹை கிளாஸ் பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார்.

இதை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும், இங்கிலாந்து அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியிலும் காட்டியிருந்தார். இது அவரது பழக்கமாக மாறி வருகிற காலம் இது. இப்படிப்பட்ட ஒரு வீரரை உருவாக்க உலகின் எல்லா பெரிய கிரிக்கெட் நாடுகளும் பெரிய தேடலை வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வீரரை கீழே அனுப்பி அதைக் கெடுக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பாது என்று நினைக்கிறேன்!

இனிவரும் காலங்களில் பணிச்சுமைக்கு ஓய்வு என்று மூத்த வீரர்களுக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓய்வு தரப்பட்டு சூர்யா, ஹர்திக் பாண்டியா ஆடும் இடத்திலிருந்து மேலே ஆடும் நிலைமை வர இருக்கிறது. இப்படி இருக்கும்போது ஹார்திக் பாண்டியா மாதிரியான ஒரு வீரரை கீழே இறக்க விரும்பமாட்டார்கள். ஹர்திக் பாண்டியா கீழே விளையாட வேண்டும் என்றால், பேட்டிங் வரிசையில் 4, 5 இடங்களில் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக நன்றாக விளையாட வேண்டும். ஆனால் இதுவரை கன்சிஸ்டன்ஸி என்கிற இடத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் பின்தங்கியே இருக்கிறார். இதனால்தான் அவர் தற்போது “தற்காலிகமாய்” ஆடும் மணிக்கு வெளியே இருக்கிறார்.

மேலும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி தொலைநோக்கான அறிவுப்பூர்வமான கூட்டணி. அர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் இருவரும் கையில் இருக்கும்போது, முதலில் உம்ரான் மாலிக்குக்கே வாய்ப்புத் தரப்பட்டது. எப்பொழுது பந்தை கையில் தந்தாலும் சராசரியாக வீசக்கூடிய ஆள் அர்ஸ்தீப் சிங் என்பதால் அவருக்கு வாய்ப்பு பொறுத்துத் தரப்பட்டது. உலகக் கோப்பையை வைத்து நகர்வதால் யாரை முதலில் பரிசோதிக்க வேண்டுமோ அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு அதில் இருந்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால் இந்தக் கூட்டணி தினேஷ் கார்த்திக்கை முதலில் பரிசோதித்து முடிவுகளை தெரிந்து வைத்துக் கொள்ள விரும்புகிறது என்று கொள்ளலாம். ரிஷப் பண்ட்டை நம்பிக்கையான வீரராக பார்ப்பதாக அர்த்தம்.

டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் வீசப்படும் லெக் ஸ்பின், லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் இந்த வகைகளை அடித்து ஆட முதல் நான்கு இடங்களுக்குள் ஒரு லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் கட்டாயம் தேவை. இரண்டு பேர் இருந்தாலும் நல்லதுதான். ஆனால்
கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் என்று இருக்கும் அணியில் ரிஷப் பண்ட்டை நுழைப்பது கடினமாக இருக்கிறது. ஐந்தாவது ஆறாவது இடங்களில் அவரை அனுப்புவது உண்மையில் வீண்வேலை தான். அந்த நேரத்தில் சுழற்பந்து வீச்சு முடிந்திருக்கும். ரிஷப் பண்ட் ஃபினிஷரும் கிடையாது. இதனால் தான் சிக்கல்!

37 வயதான தினேஷ் கார்த்திக் ஒரு பினிஷர் என்பதால் மட்டுமே அணியில் இருக்கிறார். அவர் இந்த வயதில் வேறு எந்த இடத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகி இருக்கமாட்டார். மற்ற இடங்களில் விளையாட நல்ல வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். மேலும் தற்போது அவர் ஒரு குறுகியகால பயன்பாட்டிற்காக டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியில் இருப்பார். அதற்கு பிறகு அவர் சிறப்பாக விளையாடினாலும், அவரின் வயதை கருத்தில் கொண்டு, எதிர்கால இந்தியா டி20 அணியை உருவாக்கும் பொருட்டு அவருக்கு தொடர் வாய்ப்புகள் தரப்படாது.

தினேஷ் கார்த்திக் ஒரு அசகாயசூரன் கிடையாது. ஆனால் அவர் ஒரு 10% தான் பினிஷர் ரோலில் செயல்படுகிறார் என்றால், அதைத்தாண்டி செயல்படும் ஒரு வீரர் இந்திய அணி நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால் தினேஷ் கார்த்திக் இப்பொழுதே அணியில் இருக்க மாட்டார். மேலும் ரிஷப் பண்ட் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், மிடில் வரிசையில் சராசரியாக தொடர்ந்து ரன்கள் எடுத்து வந்தாலும், தினேஷ் கார்த்திக் இந்திய t20 அணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன்தான் அணியில் இருப்பார்!

இவ்வளவு பெரிய பதிவு எதுக்கு அப்படினா, விசயமே தெரியாம என்ன ஏதுன்னு புரியாம, அந்த மனுஷன் தினேஷ் கார்த்திக்கை கிக்கி பிக்கி பண்ணிக்கிட்டு இருக்காதிங்க அப்படின்னுதான்!

✍️ Richards