ருதுராஜிடம் கன்சிஸ்டன்சி.. கில்லிடம் பவர் ஹிட்டிங்.. இந்திய அணிக்கு யார் தேவை? உத்தப்பா பதில்!

ருதுராஜிடம் கன்சிஸ்டன்சி.. கில்லிடம் பவர் ஹிட்டிங்.. இந்திய அணிக்கு யார் தேவை? உத்தப்பா பதில்!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டதோடு, சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டது. இந்திய அணிக்காக இருவருமே சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது முன்னாள் வீரர்களிடையே ஓயாத விவாதமாக நடந்து வருகிறது.

ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், ரஞ்சி டிராபி என்று அத்தனை உள்நாட்டு தொடர்களிலும் கன்சிஸ்டன்சியுடன் ரன்களை குவித்து வருகிறார். அதிலும் ஸ்பின்னர்களை ருதுராஜ் கெய்க்வாட் ஸ்டெப் அவுட் செய்து சச்சின் ஸ்டைலில் பவுண்டரிகள் அடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை இருக்கிறது என்றாலும், அதனை சரி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் ருதுராஜ்-க்கு அதிகளவிலான ஆதரவை சோசியல் மீடியாவில் அளித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சிஎஸ்கே ஜாம்பவான் ராபின் உத்தப்பா பேசுகையில், இந்திய அணியில் சுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் என்று தேர்வுக் குழுவினர் செயல்படுகின்றனர். இருவரையும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களின் ஸ்டாட்ஸ்களே பார்த்தாலே இருவரும் திறமையை நிரூபித்துள்ளதை புரிந்து கொள்ள முடியும்.

அதனால் இருவரில் ஒருவரை நிச்சயம் தேர்வு செய்வது கடினமான விஷயம். ருதுராஜ் கெய்க்வாட் போல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ள பேட்ஸ்மேனை பார்க்க முடியாது. இவரின் கன்சிஸ்டன்சி இருக்கிறது என்றால், சுப்மன் கில்லிடம் பவர் ஹிட்டிங் உள்ளது. அதேபோல் சில வித்தியாசமான ஷாட்களை சுப்மன் கில் வைத்துள்ளார்.

அதனால் இந்திய அணியில் இருவரையும் தேர்வு செய்து விளையாட வைப்பதே சரியான விஷயமாக நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இருவருமே 3 வடிவங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் என்று தெரிவித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டாப் 4 பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாடக் கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.