ரோகித், கோலியை அனுப்பி தப்பு செஞ்சுட்டோமோ? எந்தக் கோச்சும் செய்யாததைச் செய்யப் போகும் கம்பீர்

ரோகித், கோலியை அனுப்பி தப்பு செஞ்சுட்டோமோ? எந்தக் கோச்சும் செய்யாததைச் செய்யப் போகும் கம்பீர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விரைவில் விளையாட உள்ளது. இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்த இரண்டு அனுபவ வீரர்களும் இல்லாத நிலையில், இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் எப்படிச் செயல்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இதுவரை எந்த இந்திய அணியின் பயிற்சியாளரும் செய்யாத ஒரு விஷயத்தைச் செய்ய இருக்கிறார். ஜூன் 6 அன்று இங்கிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியுடன், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பயணிக்க இருக்கிறார். ஜூன் 20 அன்றுதான் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இதற்கு முந்தைய காலங்களில், மூத்த இந்திய அணி எப்போது போட்டிகளில் பங்கேற்கச் செல்கிறதோ, அந்த அணியுடன் தான் பயிற்சியாளரும் பயணம் செய்வார். அதற்குச் சில வாரங்களுக்கு முன், இந்தியா ஏ அணி அந்த நாட்டுக்குப் பயணம் சென்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடும். அதில் ஒன்று அல்லது இரண்டு இந்திய டெஸ்ட் அணி வீரர்களும் இடம்பெற்று இருப்பார்கள்.

ஆனால், இந்த முறை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட உள்ள பல இளம் வீரர்களை இந்தியா ஏ அணியில் ஆட வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா ஏ அணி ஆடும் போட்டிகளை அருகே இருந்து பார்க்கவும் கௌதம் கம்பீர் முடிவு செய்திருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு பின்னணியில் கௌதம் கம்பீர் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கம்பீர்தான் அனுபவ வீரர்களை வெளியேற்றினார் எனப் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இந்திய அணி பெறவில்லை என்றால், அது கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாறிவிடும். ரோகித் சர்மாவையும், விராட் கோலி யையும் அவர் வெளியேற்றியதைப் பற்றி நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பேசத் தொடங்குவார்கள். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழும்.

அதைத் தவிர்க்க வேண்டும் என்றால், எப்படியாவது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும். தொடரை வெல்ல விட்டாலும், சிறந்த செயல்பாடுகள் முக்கியம். எனவேதான் கௌதம் கம்பீர் இந்தியா ஏ அணி வீரர்களுடன் பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். அவரது திட்டம் வெற்றி பெறுமா என்று பார்க்கலாம்.

Previous articleமீண்டும் ஏமாற்றப்பட்ட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்.. இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கொடுத்த காரணமே வேற!
Next articleசிஎஸ்கே மேட்ச்சில் ஜெயிச்சுருக்கலாம்.. இப்ப பிளே ஆஃப் போச்சு..KKR-ஐ விளாசிய ஆரோன் பின்ச்