ரோஹித் சர்மா – ஜாகிர் கான் பேச்சு சர்ச்சை! வீடியோவை நீக்கிய மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடந்தது?
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கானுடன் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு விட்டு, பின்னர் நீக்கி இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுடன் ரோஹித் சர்மா பேசும் வீடியோவை தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ துவங்கும் போது அவர் ஜாகிர் கானுடன் பேசும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆனால், அதன் ஆடியோ சரியாக கேட்கவில்லை. ஆனால், சில ரசிகர்கள் அந்த ஆடியோவை அதிக சத்தத்துடன் மாற்றி ரோஹித் சர்மா என்ன சொன்னார் என்பதை மொழிபெயர்த்து உள்ளனர்.
அதில், “நான் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து விட்டேன். நான் இப்போது செய்ய வேண்டியது எதுவுமே இல்லை” என்று கூறி இருக்கிறார் ரோஹித் சர்மா. இதில் அவர் மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் அங்கு தான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்பது பற்றி அதிருப்தியுடன் பேசி இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஜாகிர் கான் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆவார். இந்த நிலையில், ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இதுவரை செய்ய வேண்டியதை செய்தாகிவிட்டது, இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார் எனவும், தனது பேட்டிங்கில் எதையும் முன்னேற்ற முடியாது என்கிறார் எனவும் ரசிகர்கள் பல்வேறு ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதே போன்ற ஒரு சர்ச்சை 2024 ஐபிஎல் தொடரிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் அபிஷேக் நாயர் சந்தித்து பேசி இருந்தனர்.
அப்போதும் இதே போல ரோஹித் சர்மா சூசகமாக ஒரு விஷயத்தை அபிஷேக் நாயரிடம் பேசியிருந்தார். அப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி தான் பேசினார் என சர்ச்சை வெடித்தது. தற்போது மீண்டும் அதே போல முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரான ஜாகிர் கானுடன் ரோஹித் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.
இது குறித்து ரசிகர்களின் ஊகங்கள் வெளியான நிலையில் மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதள பக்கங்களில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை இழந்த பிறகு ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த சர்ச்சை அதை மேலும் பெரிதாக்கி இருக்கிறது.
ரோஹித் சர்மா இதுவரை 2025 ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 21 ரன்களை மட்டுமே எடுத்து இருக்கிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.