வங்கதேச வீரரின் தில்லுமுல்லு.. டிஆர்எஸ்-க்கு உதவி கோரியதால் எழுந்த சர்ச்சை.. நாகினிஸ் செய்த மோசடி!

வங்கதேச வீரரின் தில்லுமுல்லு.. டிஆர்எஸ்-க்கு உதவி கோரியதால் எழுந்த சர்ச்சை.. நாகினிஸ் செய்த மோசடி!

வங்கதேச அணியின் இளம் வீரர் ஜேக்கர் அலி டிஆர்எஸ் முறையீடு செய்வதற்கு ஓய்வறையில் உதவி கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 37வது லீக் போட்டியில் வங்கதேசம் – நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் வங்கதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இதன் காரணமாக வங்கதேசம் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் வங்கதேசம் அணி இந்த போட்டியில் டிஆர்எஸ் முறையீடு கோரியதில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வங்கதேசம் அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வங்கதேசம் அணியின் தன்சிம் – ஜேக்கர் அலி கூட்டணி களத்தில் இருந்தது.

அப்போது சந்தீப் லெமிச்சானே வீசிய 14வது ஓவரில் தன்சிம் 3 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். நேபாள அணி வீரர்கள் அவுட் என்று நடுவரிடம் முறையீடு செய்ய, உடனடியாக அவுட் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்பின் தன்சிம் ஹசன் நேராக நடந்து செல்ல, மறுமுனையில் நின்றிருந்த ஜேக்கர் அலி ஓய்வறை பக்கம் திரும்பி டிஆர்எஸ் முறையீடு செய்யலாமா என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஓய்வறையில் டிஆர்எஸ் எடுக்குமாறு சிக்னல் கொடுக்க, உடனடியாக ஜேக்கர் அலி தன்சிமிடம் கூறினார். இதன்பின்னர் தன்சிமும் டிஆர்எஸ் முறையீடு செய்தார். இது அப்பட்டமாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது. இதனால் ரசிகர்கள் பலரும் ஐசிசி விதிமுறையை வங்கதேச அணி மீறியுள்ளதாக சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர்.

வழக்கம் போல் வங்கதேசம் அணி வெற்றி மட்டுமே நோக்கம் என்று பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வங்கதேச அணி வீரர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.