வரலாற்றில் இதுவே முதல் முறை- இடக்கை வீரர்களிடம் சிக்குண்டு தவித்த ஆப்கானிஸ்தான்…!

நசும் அஹ்மத் அபாரம்; வங்கதேசம் அசத்தல் வெற்றி

வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரசூலி, கரீம் ஜானத் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் ஓரளவு தக்குப்பிடித்த நஜிபுல்லா ஸத்ரான் 27 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வந்தவேகத்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.

இதனால் 17.4 ஓவர்களிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் நசும் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், சொரிஃபுல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்தப் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இடக்கை பந்துவீச்சாளர்களே கைப்பற்றி  ஆப்கானிஸ்தான் அணியை நிலைதடுமாற செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Abdh