வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் தர மாட்டோம்.. மல்யுத்த சம்மேளனம் எதிர்ப்பு

வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் தர மாட்டோம்.. மல்யுத்த சம்மேளனம் எதிர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதி சுற்றுக்கு வினேஷ் போகத் தகுதி பெற்ற நிலையில் அவர் 100 கிராம், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் விதிகளின் படி வினேஷ் போகத்துக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் வெளியேறினார்.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு பின்னால் விதிமீறல்கள் இருப்பதாகவும் சதி நடைபெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதை எதிர்த்து வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், இது குறித்து விசாரணை நடத்தியது. இதில் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஆகஸ்ட் 13ஆம் தேதி தான் வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் லாலோவிச் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், வினேஷ் போகத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன நடந்தது என்று அனைவருக்குமே தெரியும். இதற்காக நான் அவர் மீது வருத்தப்படத்தான் முடியுமே தவிர எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் விதிகள் என்பது அனைவருக்கும் சமமானது. ஒருவருக்காக விதியை எங்களால் மாற்ற முடியாது.

விளையாட்டுத்துறை என்பது விதிகளை சுற்றியே நடைபெறும். நான் ஐரோப்பா பகுதியை சேர்ந்தவன். நான் இந்தியாவில் வந்து கார் ஓட்டுகிறேன் என்றால் இந்திய விதியை தான் நான் பாலோ செய்வேன். அதை விட்டுவிட்டு ஐரோப்பாவில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதை நான் இந்தியாவில் பாலோ செய்தால் பிரச்சனை தான் ஏற்படும்.

அதேபோல் தான் விளையாட்டுத்துறை சேர்ந்த அனைவருக்கும் ஒரே விதி தான்.
இயங்குகிறது. காயம் அடைந்த வீரர்களுக்கு என ஒரு விதி இருக்கிறது. ஆனால் வினேஷ் போகத்துக்கு காயம் ஏற்படவில்லை. அப்படி அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது என்று சொன்னால் நாங்கள் அதை மருத்துவர் குழு வைத்து சோதனை செய்திருப்போம். இந்த ஒலிம்பிக் தொடரிலே ஒரு வீரர் எடை அதிகரித்தது என்பதால் எடை பரிசோதனைக்கு வரவில்லை.

இதன் மூலம் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகக்கு மட்டும் எங்களால் ரூல்ஸ் மாற்ற முடியாது. முதல் நாள் மட்டும் எடையை பரிசோதித்து இரண்டாவது நாள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது தவறு! முதல் நாள் முடிவில் 5 கிலோ எடை அதிகரித்து விட்டு இரண்டாம் நாள் விளையாடினால் அது போட்டியில் ஒரு சமநிலையை ஏற்படுத்தாது.

மல்யுத்தம் என்பது எடையை வைத்து நிர்ணயிக்கப்படும் போட்டியாகும். இதனால் வினேஷ் போகத் தமக்கு வெள்ளி பதக்கம் வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் தீர்ப்பாயத்தில் கண்டிப்பாக எதிர்ப்போம். ஒருவேளை தீர்ப்பாயம் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால்,அதை ஏற்றுக் கொள்வோம் என்று லாலோ வீச் கூறியுள்ளார்.

Previous articleநீரஜ் சோப்ரா பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு.. வினேஷ் போகத் பயிற்சிக்கு எவ்வளவு செலவு தெரியுமா?
Next articleஐபிஎல் அணிகளால் உலக கிரிக்கெட்டுக்கே ஆபத்து.. உடனே விழித்து கொள்ளுங்கள்.. ஆஸி. ஜாம்பவான் எச்சரிக்கை