வியாஸ்காந்த்தின் அசத்தல் பந்துவீச்சுடன் ஸ்டார்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்..!

வியாஸ்காந்த்தின் அசத்தல் பந்துவீச்சுடன் ஸ்டார்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்..!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இன்று (16) நடைபெற்ற முக்கியமான போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர், 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதில், ஜப்னா கிங்ஸ் அணியில் முக்கியமான இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தன.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்பேசும் வீரர்களில் ஒருவரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் அஷான் ரந்திக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு ஸ்டார்ஸ் அணியில், கடந்த போட்டியில், அதிரடி துடுப்பாட்டத்துடன் வெற்றியை பெற்றுக்கொடுத்த, சீகுகே பிரசன்ன இந்த போட்டியில் உபாதை காரணமாக விளையாடவில்லை.

போட்டியை பொருத்தவரை, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஜப்னா கிங்ஸ் அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்திருந்தது. டொம் கொலர்-கெட்மோர் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், முதல் விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

உபுல் தரங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கெட்மோர் மிகச்சிறந்த முறையில், ஓட்டங்களை குவித்தார். இவர், அரைச்சதத்தை கடந்து, இந்த பருவகாலத்தின் முதல் சதத்தை பதிவுசெய்யும் முனைப்புடன் ஓட்டங்களை குவித்த போதும், 55 பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நவீன் உல் ஹக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஜப்னா கிங்ஸ் அணி ஓட்டங்களை பெறுவதில் சில சவால்களை எதிர்கொண்ட போதும், இறுதிநேரத்தில் வனிந்து ஹஸரங்க 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 193 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கவேண்டிய நிலையும் அழுத்தத்தை கொடுத்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மெதிவ்ஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி களமிறங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தனர். இதில், 24 ஓட்டங்களுக்குள், மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து இந்த தொடரில் முதல் போட்டியில் விளையாடி பந்துவீச ஆரம்பித்த வியாஸ்காந்த், தன்னுடைய முதல் ஓவரில் குசல் பெரேராவை வீழ்த்தி அபாரம் காண்பித்தார். தொடர்ந்து, கொழும்பு ஸ்டார்ஸ் அணி விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணியால் வெற்றியிலக்கை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.

வியாஸ்காந்த் தன்னுடைய ஓவர்களில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றிருந்த டொம் பெண்டன் (30) மற்றும் கீமோ போல் ஆகியோரை வீழ்த்த கொழும்பு அணியின் வெற்றி கனவு தகர்க்கப்பட்டது. இறுதியில் ஜெய்டன் சீல்ஸ் மறுபக்கம் விக்கெட்டுகளை வீழ்த்த, கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு, 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஜப்னா அணியை பொருத்தவரை, ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், வியாஸ்காந்த் மூன்று விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

ஜப்னா கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில், முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இதன் மூலம் இவர்கள் முதலாவது குவாலிபையர் போட்டியில் விளையாடும் தகுதியை பெற்றுக்கொண்டனர். எனினும், கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பிளே-ஓஃப் வாய்ப்பு கண்டி வொரியர்ஸ் அணியின் போட்டி முடிவுகளில் உள்ளது. கொழும்பு ஸ்டார்ஸ் அணி தங்களுடைய அடுத்த போட்டியில், கண்டி வொரியர்ஸ் அணியை வீழ்த்தினால், பிளே-ஓஃப் வாய்ப்பை பெறமுடியும்.
எனினும், கண்டி வொரியர்ஸ் அணி, இன்றைய போட்டியில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, அடுத்த போட்டியில் கொழும்பு அணியை வீழ்த்தினால், ஓட்ட விகிதிதத்தின் முன்னிலையுடன், கண்டி வொரியர்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

#ABDH