விராட் கோலி அல்ல! இந்த வெளிநாட்டு வீரர் தான் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முறியடிப்பார்- பாண்டிங்
சர்வதேச கிரிக்கெட்டில் யாராலும் தொட முடியாது என நினைக்கப்படும் சாதனை என்றால் அது சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் மற்றும் அதிக சதம் எடுத்த சாதனை தான். இதனை முறியடிக்க வேண்டும் என்றால் சிறுவயதில் இருந்து சுமார் 20 ஆண்டுகள் வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே சாதிக்க முடியும்.
இந்த நிலையில் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்றால் அது விராட் கோலியால்தான் முடியும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சச்சினில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் சாதனையை விராட் கோலி அண்மையில் முறியடித்தார்.
இந்த நிலையில் சச்சினின் மற்றொரு சாதனையான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரெக்கார்டை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தான் முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் தற்போது 12,027 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 32 சதம், 63 அரை சதம் அடங்கும்.
தற்போது அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் ஏழாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை அடித்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்றால் அது ஜோ ரூட்டால் தான் முடியும். ஜோ ரூட்டுக்கு தற்போது 33 வயது தான் ஆகிறது.
அவர் மூன்று ஆயிரம் ரன்கள் தான் பின்தங்கி இருக்கின்றார். அதேசமயம் இங்கிலாந்து அணி ஒரு ஆண்டில் எவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்பதை பொறுத்து தான் இந்த சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும். குறைந்தபட்சம் இங்கிலாந்து அணி ஒரு ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் ஜோ ரூட் 800 முதல் 1000 ரன்களை ஒரு ஆண்டுக்கு அடித்தால்,அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் தனது 37-வது வயதில் சச்சின் சாதனையை முறியடித்து விடுவார்.
ரன்கள் அடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சச்சின் சாதனை முறியடிக்க அவருக்கு அனைத்து விதமான வாய்ப்புகளும் இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோ ரூட் பேட்டிங் இல் மெருகேறி வருகிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தன்னுடைய 30வது வயதில் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருப்பார்கள்.அப்போது தாங்கள் அடிக்கும் ரன்களை பெரிய ஸ்கோர் ஆக மாற்றுவார்கள். அதனை ஜோ ரூட் சிறப்பாக செய்து வருகிறார். எப்போதெல்லாம் அவர் அரைசதம் அடிக்கிறாரோ அதை பெரிய சதமாக மாற்றி வருகிறார் என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.