“ஷமி இன்னும் சின்னப் பையன் இல்லை.. அவருக்கு டீமில் என்ன வேண்டும்?” முன்னாள் கோச் அதிரடி பேச்சு

“ஷமி இன்னும் சின்னப் பையன் இல்லை.. அவருக்கு டீமில் என்ன வேண்டும்?” முன்னாள் கோச் அதிரடி பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த ஃபராஸ் மம்ப்ரே தனது பணியை நிறைவு செய்து இந்திய அணியை விட்டு விலகி இருக்கிறார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி குறித்து அவர் அளித்துள்ள பேட்டி சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.

முகமது ஷமிக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்பதையும், அவருக்கு வயதாகி விட்டது, அவர் இன்னும் இளம் வீரர் இல்லை, அவருக்கு அணியில் என்ன வேண்டும்?, அவர் எதை எதிர்பார்க்கிறார்? என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் புதிய பவுலிங் பயிற்சியாளர் கண்டறிய வேண்டுமென அவர் கூறியிருக்கிறார்.

முகமது ஷமி கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் சில போட்டிகளில் வாய்ப்பின்றி வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா காயத்தால் அணியில் இடம் பெற்ற அவர் விக்கெட் வேட்டையாடி, இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். பின்னர் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் ஃபராஸ் மம்ப்ரே இந்திய அணியை விட்டு விலகியவுடன், முகமது ஷமியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்கிற தொனியில் பேசி இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் ஷமி குறித்து பேசியது – “தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பயிற்சியாளர் குழுவினர் ஷமி-யிடம் பேச வேண்டும். அவர் இந்திய அணியில் என்ன செய்ய விரும்புகிறார்? என்பதை கண்டறிய வேண்டும். அவர் இன்னும் இளம் வீரர் அல்ல. அவர் அணியில் எந்த இடத்தில் சரியாக செயல்பட முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரால் விளையாட முடியும்? அவரை எப்படி நம்மால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்? என்பதை அவர்கள் கண்டு அறிய வேண்டும். கவுதம் கம்பீர் உடன் வரும் பவுலிங் பயிற்சியாளர் நிச்சயமாக அதை செய்வார் என்று நம்புகிறேன்”

“ஷமி இனி டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாட வேண்டும் என விரும்புகிறார் என்றால், அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் முழு உடற் தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால், ஷமி அதைத்தான் விரும்புகிறாரா? அவரது உடல் அதற்கு ஒத்துழைக்குமா? என்பதை நாம் பார்க்க வேண்டும். மேலும், ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவர் சில கிரிக்கெட் போட்டிகளிலாவது ஆட வேண்டும். அவர் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடாமல் இருக்கிறார்”

“தனிப்பட்ட உடற் தகுதி வீரருக்கு வீரர் மாறும். அனைத்து வீரர்களுக்கும் உடற் தகுதி ஒரே அளவில் இருக்காது. எனவே, நாம் ஒவ்வொருவரையும் வேறு விதமாக கையாள வேண்டும். ஷமியே எந்த ஒரு இளம் பந்து வீச்சாளருடனும் நாம் ஒப்பிட முடியாது. ஷமியுடைய மதிப்பு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் யோ யோ தேர்வில் ஓட வேண்டுமா அல்லது அதற்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசி விக்கெட் வீழ்த்த வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறி இருக்கிறார் ஃபராஸ் மம்ப்ரே.

ஷமிக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார். உடற் தகுதி தேர்வில் ஷமி தேர்ச்சி அடைந்தாலும், மீண்டும் போட்டிகளில் ஆட வரும் போது அவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது என்பதை சுட்டிக் காட்டவே, யோ யோ தேர்வில் பங்கேற்க வேண்டுமா? அல்லது போட்டியில் பந்து வீச வேண்டுமா? என கேட்டு இருக்கிறார். இதன் மூலம் ஃபராஸ் மம்ப்ரே ஷமிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.