புதிய செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மறுத்துவிட்டதால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நெருக்கடியில் காணப்படுகின்றது.
அண்மையில் அவர்களின் சம்பளம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் கருத்துப்படி, புதிய ஒப்பந்தம் உண்மையில் வீரர்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினர். ஆயினும் இங்கிலாந்துக்காக புறப்பட இருக்கும் 24 வீரர்களுள் எவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதே இங்கு முக்கியமானது.
வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் காலக்கெடு நேற்றுடன் நிறைவேறியது. கிரிக்கெட் வீரர்கள் “நியாயமற்ற மற்றும் வெளிப்படையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உடன்படவில்லை” என்பதை வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார்.
முன்னதாக, இந்த ஒப்பந்தத்தை முன்மொழிந்த கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, புதிய ஒப்பந்தங்கள் குறித்து புகார் செய்வதை விட வீரர்கள் தங்கள் நாட்டிற்காக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கதே.
இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஆஷ்லி டி சில்வா கூறுகையில், Executive committee கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தாலும் இதுவரை வீரர்களுக்கும் கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் எதுவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
ஆயினும் முன்னர் அரவிந்த தெரிவித்த கருத்துப்படி, வீரர்கள் ஒவ்வொரு தொடருக்குமான தனித்தனி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டே பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுடனான தொடரை எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.