ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கிண்ணத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டியின் 4வது போட்டியாக, ஹாங்காங் அணிக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
Toss வென்ற ஹாங்காங் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ஓட்டங்களை விரைவாக எடுத்தார்.விராட் கோலி 59 ஓட்டங்களும், கேஎல் ராகுல் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் மொஹமட் கசன்பர் மற்றும் ஆயுஷ் சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதன்படி 193 ஓட்டங்கள் என்ற அபார வெற்றியை நோக்கி களம் இறங்கிய ஹொங்கொங் துடுப்பாட்ட வீரர்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
ஹாங்காங் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41 ஓட்டங்களும், கிஞ்சித் ஷா 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் (44) , அவேஸ் கான் (53) இருவரும் தமக்கிடையிலான 8 ஓவர்களில் 97 ஓட்டங்களை வாரி வழங்கினாலும் ஹொங்கொங் அணியுடனான இந்தப் போட்டியில் இந்தியா 40 ஓட்டங்களால் வெற்றிபெற்று Super 4 சுற்றுக்கு தேர்வானது ?
குரூப் A இயிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் மற்ற அணி ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியின் மூலம் தீர்மானிக்கப்படும்.