10 விக்கெட்டுக்களால் ஆப்கானை பந்தாடிய இலங்கை அணி..!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பத்து விக்கெட்டுக்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி 7.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 32 , நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 22 பெற்றனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும் போது, ​​தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தாலும் அவர்களால் இறுதியில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நேற்றைய தினம் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தலைவலி கொடுத்து வந்த பின்னணியில் இன்று காலை வேளையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் 52 க்கு ஆப்கானிஸ்தானின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது புதிய பந்தைப் பெற்றுக் கொண்ட கசுன் ராஜித இரண்டாவது ஓவரில் 54 க்கு ரஹ்மத் ஷாவின் முதல் விக்கெட்டைப் பெற முடிந்தது.

பிரபாத் ஜெயசூர்யா, தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பெற்ற இப்ராஹிம் சத்ரானை 114 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இக்ராம் அலிகில் மற்றும் கைஸ் அகமது ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர், ஜியா உர் ரஹ்மான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நசீர் ஜமால் ஆட்டமிழக்காமல் 41.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 107 க்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பந்து வீச்சில் அசித்த பெர்னாண்டோ  3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 198 ம், இலங்கை பதிலுக்கு 439 ம் பெற்றது. ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் சதம் அடித்து இலங்கை இன்னிங்ஸை பலப்படுத்தினர்.