கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பேட்ஸ்மன் எனும் வார்த்தைக்கு பதிலாக பொதுப் பதத்தை அறிமுகப்படுத்துகிறது எம்சிசி ..!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பேட்ஸ்மேன் என்கிற கிரிக்கெட் சொல்லுக்கு மாற்றாக பேட்டர் என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளது எம்.சி.சி.

கிரிக்கெட் விதிமுறைகளை வகுப்பதில் எம்.சி.சி. என்றழைக்கப்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் கிரிக்கெட் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

சமீபகாலமாக மகளிர் கிரிக்கெட் அதிக முன்னேற்றம் கண்டு வருகிறது. 2017 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இந்த ஆட்டம் நடைபெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தார்கள்.

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய இந்த ஆட்டத்தை 86,174 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் என்கிற சொல் ஆடவரை மட்டும் குறிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தார்கள். சில ஆங்கில ஊடகங்கள் பேட்ஸ்மேன் என்கிற சொல்லுக்குப் பதிலாகப் பொதுவாக பேட்டர் என்கிற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன.

இதனால் பேட்ஸ்மேன் (Batsman) , பேட்ஸ்மென் (Batsmen) என்கிற சொற்களுக்குப் பதிலாக பேட்டர் (Batter) , பேட்டர்ஸ் (Batters) என்கிற பொதுவான சொற்களை ஆடவர், மகளிர் கிரிக்கெட்டில் பயன்படுத்தும்படி தனது விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது எம்.சி.சி.

பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் சொற்களைப் பயன்படுத்தும்போது கிரிக்கெட் அனைவருக்குமானதாக மாறுகிறது என இந்த மாற்றம் பற்றி எம்.சி.சி. கருத்து தெரிவித்துள்ளது.

#ABDH