132 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை டெஸ்டில் புதிய வரலாறு

2 டெஸ்ட் போட்டிகளில் 4 கேப்டன்கள்: 132 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை டெஸ்டில் புதிய வரலாறு

ஏறக்குறைய 132 ஆண்டுகளுக்குப் பின் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தி உள்ளார் .

இந்த நிலையில் 132 வருடங்களுக்கு பிறகு 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் தலைமை தாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே பொறுப்பேற்றார். மும்பையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி வந்துவிட்டதால், ரஹானே அமரவைக்கப்பட்டார். கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

நியூஸிலாந்து அணியில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். ஆனால், வில்லியம்ஸனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், மும்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை டாம் லாதம் கவனிக்கிறார்.இதுபோன்று இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதாகும்.

இதற்கு முன் கடைசியாகக் கடந்த 1889-ம் ஆண்டு இதேபோன்று இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அணி பயணம் செய்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு ஓவன் டன்னல் மற்றும் வில்லியம் மில்டன் என இரு போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருந்தனர். அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் என இரு கேப்டன்கள் செயல்பட்டனர்.

ஏறக்குறைய 132 ஆண்டுகளுக்குப் பின் இதேபோன்று 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.