மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இந்தியா!

மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இந்தியா!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் 12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்தடுத்து 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன. அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தொடக்க வீராங்கனைகளான மந்தனா 30, ஷஃபாலி வர்மா 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். 15ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்த இந்தியா திடீரென 5 பந்துகளில் ஒரு ரன்னும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் அதற்குப் பிறகு நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயம் இந்திய பேட்டர்களுக்கு ஏற்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய யாஷ்திகா பாட்டியா 50 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் பூஜா 30, ஸ்நே ராணா 27 ரன்களை விரைவாக எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை அளித்தார்கள். வங்கதேசத்தின் ரிது மோனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணியில் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சல்மா காதுன் ஓரளவு விளையாடி 32 ரன்களைச் சேர்த்தார்.

ஆனால் மற்ற வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 40.3 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

#Abdh