15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு- கெத்துக் காட்டிய ரோகித், புஜாரா அபார சாதனை ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இந்த 4வது போட்டி தொடரை தீர்மானிக்கல்ல முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் பெற்று இந்தியா ஆட்டமிழந்தது, இங்கிலாந்து 290 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
99 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இந்தியா இந்த போட்டியை எவ்வாறு எதிர் கொள்ளும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையிலான மிகச் சிறந்த 83 ஓட்டங்கள் ஆரம்ப இணைப்பாட்டம், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா, ரோகித் சர்மா ஆகியோரின் அற்புதமான 153 ஓட்டங்கள் சத இணைப்பாட்டம் இந்தியாவை ஓரளவிற்கு இந்த போட்டியிலேயே போராட செய்தது எனலாம்.
மிக அற்புதமாக ரோகித் சர்மா இன்று 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார், அண்மைக்காலமாக தடுமாறிக் கொண்டு வரும் புஜாரா இந்த போட்டியில் அற்புதமான 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
2006ஆம் ஆண்டு இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுக்காக இணைந்து ஆடிய புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சொல்லும்படியான அற்புத இணைப்பாட்டம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க தவறியதும், புஜாரா மட்டுப்படுத்தப்பட்ட போட்டிக்கான அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க தவறியதுமே இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவை காப்பாற்றத்தக்க இணைப்பாட்டம் புரிவதை தாமதப்படுத்தின.
அண்மைக்காலமாக ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டதால் புஜாராவோடு இணைந்து பாராட்டத்தக்க வகையிலான இணைப்பாட்டம் ஒன்றை இருவரும் புரிந்துள்ளமை சிறப்புக்குரியதாக நோக்கப்படுகிறது.
மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருகின்ற போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியை விடவும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்கும 171 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடரும்.