17 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்தின் டெஸ்ட் சுற்றுலா- அட்டவணை..!

டிசம்பர் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திங்களன்று அறிவித்தது.

முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் டிசம்பர் 1-5 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் முல்தானில் டிசம்பர் 9-13 வரையிலும் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் விருப்பமான சொந்த மைதானமான – கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் டிசம்பர் 17-21 வரை நடைபெறும்.

கராச்சியில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து 2000 ஒருதடவை இந்த மைதானத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2007-ல் பாகிஸ்தானை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா மற்றைய டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த நேஷனல் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் 23 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. .

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்தின் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுவாகும். டிசம்பரில் டெஸ்ட் தொடருக்காகத் திரும்புவதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடக்கும் T20 உலகக் கோப்பைக்கான முன்னாயத்தமாக அடுத்த மாதம் பாகிஸ்தானில் இங்கிலாந்து ஏழு போட்டிகள் கொண்ட இருபது20 தொடரை விளையாட உள்ளது.

WTC புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து ஏழாவது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.