18 ஆண்டுக்கால கனவு.. என் இளமை, முழு வாழ்க்கையையும் ஆர்சிபிக்கு வழங்கினேன்.. விராட் கோலி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆர் சி பி அணி கைப்பற்றி 18 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி இந்த வெற்றி எங்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் எங்கள் ரசிகர்களுக்காகவும் முக்கியம்.
ஏனென்றால் 18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன். என்னுடைய உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன்.
ஆனால் இறுதியில் இந்த கோப்பை எனக்கு கிடைத்திருப்பது உண்மையிலேயே நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது. இந்த நாள் என் வாழ்க்கையில் வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடைசி பந்து வீசப்பட்டவுடன் என்னையும் மீறி நான் உணர்ச்சி வசப்பட்டேன். என்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு துளி சக்தியையும் ஆர் சி பி அணிக்காக வழங்கி இருக்கின்றேன்.
என்னைப்போல டிவிலியர்ஸும் இந்த அணிக்காக கடுமையாக உழைத்து இருக்கின்றார். நான் அவரிடம் சொன்னது இந்த வெற்றி எங்களுக்கானது மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்து தான். நீங்களும் எங்களுடன் இணைந்து இந்த வெற்றியை கொண்டாடுங்கள் என்று கூறியிருக்கின்றேன். ஏனென்றால் ஆர் சி பி அணிக்காக பல ஆட்டநாயகன் விருதை வாங்கி இருப்பது அவர் மட்டும்தான். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றும், அவர்தான் முதல் இடத்தில் இருக்கின்றார்.
அந்த அளவுக்கு ஆர் சி பி அணியின் அவர் தாக்கத்தை ஏற்படுத்திருக்கின்றார். எனவே நாங்கள் கோப்பையை வெல்லும் போது மேடையில் டிவில்லியர்ஸ் இருப்பதும் முக்கியம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த ஐபிஎல் வெற்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இந்த 18 ஆண்டு காலம் தான் ஆர்சிபி அணிக்கு விசுவாசமாக இருந்து உள்ளேன். எவ்வளவு விஷயங்கள் நடந்தாலும், நான் இந்த அணியை விட்டு செல்ல மாட்டேன் என்று தொடர்ந்து அவர்களுடன் இருந்திருக்கின்றேன்.
அது போல் அவர்களும் என் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார்கள். ஆர் சி பி அணியுடன் கோப்பையில் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. இந்த கோப்பையை வென்றது மிகவும் ஸ்பெஷலான விஷயமாக இருக்கின்றது. ஏனென்றால் என்னுடைய இதயம் பெங்களூருடன் தான் இருக்கின்றது. என்னுடைய உயிர் என்னுடைய ஆவி அனைத்தும் பெங்களூருடன் தான் இருக்கின்றது.
நான் என்னுடைய கடைசி கிரிக்கெட் வாழ்க்கை வரை இந்த அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ஒரு விளையாட்டு வீரராக நான் இந்த அணிக்காக கடுமையாக உழைத்து இருக்கின்றேன். இது நமது சக்தியை உரிந்து எடுக்கும் தொடராக இருக்கிறது. அந்த அளவுக்கு திறன் வாய்ந்த ஒரு விளையாட்டு போட்டியாக ஐபிஎல் இருக்கின்றது. இதனால் தான் உலகை மிக சிறந்த கிரிக்கெட் தொடராக விளங்குகிறது. இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஒரு கோப்பை மட்டும் தான் என்னிடம் இல்லாமல் இருக்கின்றது. தற்போது நான் குழந்தை போல் தூங்குவேன் இந்த வெற்றி பெங்களூர்க்கானது.