20 ஆண்டுகால காத்திருப்பு- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!

20 ஆண்டுகால காத்திருப்பு- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

வங்கதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியினர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதன்மூலம் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்கள் குவித்தார். லிட்டன் தாஸ், யாசீர் அலி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. அதன்படி விளையாடிய அந்த அணியின் மாலன், கைல் வெர்ரைன், கேப்டன் பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டின.

பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் – டேவிட் மில்லர் இணை பொறுப்பை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.

அதன்பின் சதமடிபார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேண்டர் டுசென் 86 ரன்களிலும், டேவிட் மில்லர் 79 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க டெய்ல் எண்டர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேலும் தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததுள்ளது.

#Abdh