27 வருட கனவு.. சொந்த ஊரில் பங்களா வாங்கிய ரிங்கு சிங்.. உதவி செய்த கேகேஆர் அணி நிர்வாகம்!
கேகேஆர் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சொந்த ஊரான அலிகாரில் பங்களா ஒன்றை வாங்கி குடிபெயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ரிங்கு சிங்கிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ரிங்கு சிங்கிற்கு திருப்புமுனையாக அமைந்தது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ரிங்கு சிங் சாதனை படைத்தார். இதன்பின் ரிங்கு சிங் கேகேஆர் அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியிலும் ரிங்கு சிங் விளையாடி வந்தார்.
சுமார் 2 ஆண்டுகளாக இந்திய டி20 அணிக்காக ரிங்கு சிங் விளையாடி வரும் சூழலில், அடுத்தக் கட்டமாக ஒருநாள் அணியிலும் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் ரிங்கு சிங் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக கேகேஆர் அணி தரப்பில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் கேகேஆர் அணி சார்பாக முதல் வீரராக ரூ.13 கோடிக்கு ரிங்கு சிங் ரீடெய்ன் செய்யப்பட்டிருந்தார். இதனால் அடுத்த சீசனில் கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணியிடம் இருந்து ரூ.13 கோடி ஒப்பந்தம் கிடைத்த சில தினங்களிலேயே ரிங்கு சிங் தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அலிகாரில் உள்ள கோல்டன் எஸ்டேட் ஓசோன் டவுன்சிப்பில் உள்ள ஒரு பங்களாவை தான் ரிங்கு சிங் வாங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரிங்கு சிங் உடனடியாக அந்த பங்களாவிற்கும் தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசன் வரை ரிங்கு சிங்கின் ஊதியமாக ரூ.55 லட்சம் மட்டுமே இருந்து வந்தது.
தற்போது கோடிகளில் உயர்ந்துள்ள நிலையில், உடனடியாக குடும்பத்தினருக்கு நல்ல பங்களா ஒன்றை ரிங்கு சிங் வாங்கி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் பங்களாவின் புகைப்படங்களை ரிங்கு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
ரிங்கு சிங் இந்திய அணிக்காக விளையாடி வருகிற போதும், அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சில ஆண்டுகள் வரை அவரின் சகோதரர் ஆட்டோ-ரிக்ஷா ஓட்டி வந்த நிலையில், தற்போது ரிங்கு சிங்கின் பயிற்சியாளருடன் இணைந்து உத்தரப் பிரதேச உள்ளூர் வீரர்களுக்கு ஹாஸ்டல், உணவு உள்ளிட்ட விஷயங்களுக்கு உதவி வருவது தெரிய வந்துள்ளது.