3 ம் நாளில் டிராவிட் – லக்ஸ்மனுக்காக காத்திருக்கும் இந்தியா, இங்கிலாந்தின் வெற்றி உறுதி..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகிறது.

லோர்ட்ஸ் மைதானத்தில் 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து, இந்த போட்டியில் அசைக்க முடியாத வெற்றியை நோக்கி கம்பீரமாக பயணிக்கிறது.

முதல் நாளிலேயே இந்தியாவை  78 ஓட்டங்களுக்குள் முடித்துக்கட்டி, விக்கட் இழப்பின்றி 120 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட இங்கிலாந்து, இன்று 2 ம் நாளில் போட்டியை தொடர்ந்தது.

இன்றைய 2-வது நாளில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர் ,டேவிட் மாலன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பிய அவரும் அரைசதம் அடித்தார்.

ஜோ ரூட் 23 வது சதம் அடித்து இந்த தொடரின் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்ய, இங்கிலாந்து அணியின் முதல் 4 வீரர்களும் மிகப் பெறுமதியான ஓட்டங்களை சேர்த்துக் கொண்டதன் அடிப்படையில் பலமான நிலையில் இங்கிலாந்தை கொண்டு சேர்த்தனர்.

இன்றைய 2 ம் நாள் நிறைவில் 423/8 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுள்ளது,  இந்தியாவை விடவும் 345 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

முன்னதாக முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 19 ஓட்டங்களையும், ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் தொலைபேசி இலக்கங்கள் போல் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர்.

இறுதியில் 78 ஓட்டங்களுக்கு இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 41-வது ஓவரில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் 500 ஓட்டங்களை பெற்றுக் கொண்டாலே தோல்வியை தவிர்ப்பது என்பது சிரமமான காரியமாக இருக்கும் என நம்பப்படும் நிலையில் ,2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் லக்ஸ்மன் மற்றும் டிராவிட் ஆகியோர் இந்தியாவை மீட்டு கரைசேர்த்ததை போன்று ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்தால் மட்டுமே இந்தியா மீண்டுவர முடியும்.

எப்படியும் இங்கிலாந்து அணி இந்த போட்டியை வென்று தொடரை 1-1 கொண்டு வரும் நிலையே அதிகம் காணப்படுகிறது.

 

 

 

காத்திருப்பு தொடரும்.