378 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல், படுதோல்வி அடைந்து இருக்கிறது இந்தியா.

378 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல், படுதோல்வி அடைந்து இருக்கிறது இந்தியா.

போன வருடம் இங்கிலாந்து மண்ணிலே கோலோச்சிய இந்திய அணி, வழக்கம் போல இறுதி ஓட்டத்தில் பின்வாங்கி, மற்றுமொரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவுக்கும் ஒரு டெஸ்ட் போட்டிகளுக்கும் எப்போதும் ஒத்து வருவதில்லை. எம்ஜிஆர் மாதிரி “முதல் அடி வாங்கி விட்டுத்தான் திருப்பி அடிப்பேன்”, என நமது ருத்துராஜ் ரூட்டையே பல ஆண்டுகளாக ஃபாலோ செய்து கொண்டிருக்கிறது. போன வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் பலத்த அடி வாங்கியது, அதில் இருந்து சில பாடங்களைக் கற்றாலும் அணியைக் கரை சேர்க்கும் முயற்சியில், இன்னும் கரை தாண்டாத கரசேவகர்களாகவே இருக்கிறார்கள்.

விளையாட்டில் வெற்றி தோல்வி இயல்புதான், எல்லா நேரமும் வெற்றியைப் பெற்றுக் கொண்டு இருக்க முடியாது என்பதுதான் கள ஏதார்த்தம். ஆனால் வெற்றிக்கான முயற்சியில் வீரர்கள் எந்த அளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதுதான், 5 நாள் டெஸ்ட் போட்டிகளின் அளவீடு.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் பெரும்பான்மையான செஷன்களை வென்றும், இறுதியில் தோல்வியைத் தழுவியிருப்பதுதான் வருத்தம் கலந்த விஷயம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சறுக்கிய அணியை, பன்ட் ஜடேஜா தூக்கி நிறுத்தினார்கள் என்றால், பௌலிங்கில் நமது பௌலர்கள் அதகளம் செய்தார்கள். பேர்ஸ்டோவைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் கட்டுபடுத்தி விட்டார்கள்.

முதல் கிணறை வெற்றிகரமாகத் தாண்டியவர்களால், ஏன் மீதிக் கிணறைத் தாண்ட முடியவில்லை. காரணம், பயம் – இங்கிலாந்து அணி ஏற்படுத்தி இருக்க உளவியல் கலந்த பயம். அந்த பயம்தான், அணியை, இரண்டாம் பாதியில் சறுக்க வைத்து போட்டியை இங்கிலாந்து பக்கம் திருப்பி விட்டது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடுவார்கள், 300, 350 லீட் எல்லாம் பத்தாது, கண்டிப்பாக 400 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற உளவியல் பயமே நமது பேட்ஸ்மேன்களை மனதளவில் பயமுறுத்தி விட்டது.

ஒரு காலத்தில் சதங்களைச் சாதாரணமாக கொண்டாடிய கோலியின் பேட்டிங் ஃபார்ம், நாளடைவில் அரை சதங்களுக்கே ஆறுதல் பட்டுக் கொள்ளும் நிலைக்கு வந்து, இன்றைக்கு மேட்சுக்கு ஓரு கவர் டிரைவ் அடித்தாலே போதும் என்ற மனநிலைக்கே வந்துவிட்டோம். அவரும் அந்த நிலைக்கே வந்து விட்டார். கோலியாலேயே ஆட முடியவில்லை, நாம் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்திற்கு, கில், விஹாரி, ஸ்ரேயாஸும் வந்ததன் விளைவே, பேட்டிங் கொலாப்ஸ் ஆகக் காரணம்.

வழக்கமாக 378 ஸ்கோரை சேஸ் செய்வது, அவ்வளவு எளிதல்ல, ஏதாவது ஓரு கட்டத்தில் போட்டியின் பிடி மாற, இரண்டு அணிகளுக்கும் சம வாய்ப்புக் கிடைக்கும். அதில் எந்த அணி அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

இங்கிலாந்து, 450 ரன்களை எதிர்பார்த்தோம், 378 தானே என்ற அசாதாரண தைரியத்தில் ஆட வந்தது. மறுபுறம் இந்திய அணியோ, இங்கிலாந்து தற்போது இருக்கும் ஃபார்முக்கு, இந்த ரன்கள் எல்லாம் பத்தாதே என்ற பயத்தில் தான் ஆடவந்தது. விளைவு, எப்போதும் ஆடாத இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கே, தைரியம் வந்து அடி வெளுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்திய அணி மனதளவில் தோற்றுவிட்டதை அங்கேயே அப்பட்டமாகக் காட்டியது.

இந்த மாதிரி பெரிய சேஸில், முதலில் விக்கெட் விழாமல் இருப்பது, பின்பு விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிவது எல்லாம் வாடிக்கையான ஓன்று. அதேமாதிரி சம்பவம்தான் நேற்று 3 விக்கெட்டுகள் விழுந்தவுடன் அனைவரும் எதிர்பார்த்தது. ஆனால் இங்கிலாந்து ரூட் , பேர்ஸ்டோ இணை “அந்த சீன் எல்லாம் இங்கே இல்லை”, எனக் கூறி இந்திய பௌலர்களை ஓட ஓட அடித்தது.

பேர்ஸ்டோ கொடுத்த கேட்சை, விஹாரி தவறவிட மிச்சக் கதையை மொத்தமாக முடித்து விட்டார். டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படை விதியே, “அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் பந்து வீசு” என்பதே. ஆனால் நமது பௌலர்கள், ஓவருக்கு இரண்டு பந்துகள், பேட்ஸ்மேனின் கால்களுக்குத்தான் வீசுவேன் என கங்கணம் கட்டி வீச, ரன்கள் மழையாகக் குவிந்தது.

இதே பௌலிங் படைதான், லார்ட்ஸில், 60 ஓவர்களில், இந்த மொத்த இங்கிலாந்துப் படையையும் சுருட்டிப் பார்சல் கட்டியது.

ஆனால் 140 ஓவர்கள் இருந்தும், ஏன் இந்த அணியைச் சுருட்ட முடியவில்லை? பிட்ச் ஃபிளாட், மெக்கல்லம் அதிரடி அணுகுமுறை என ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸில் 378 ரன்கள் சேஸ் என்றால், எந்த அணிக்கும், அது சிம்ம சொப்பனம்தான். அவர்கள் சேஸ் செய்து விடுவோம் என்ற மன நிலையில் பேட்டிங் ஆட ஆரம்பித்தார்கள், ஆனால் நாம் இந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்துவிடுவோம் என்று எந்தக் கட்டத்திலும், தங்களை முன்னிறுத்தி ஆட முயலவில்லை. “பேர்ஸ்டோ அடித்து விடுவாரோ?, ரூட் நின்று விடுவாரோ?”, என்ற மனக் குழப்பத்திலேயே இறங்கி, போட்டியை இங்கிலாந்துக்குத் தாரை வார்த்து விட்டார்கள்.

இந்திய அணிக்கு பெரிய டெக்கனிக்கல் பயிற்சிகள் எல்லாம் தேவையில்லை, அவர்களது தற்போதைய தேவையெல்லாம் ‘Killer instinct’ என்று சொல்லப்படும், எந்தக் கட்டத்திலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் ஆடும் மனப் பயிற்சியே.

யார் யாருக்கோ கோடிகளைக் கொட்டிக் கொடுத்து, கோச்சிங் ரோலுக்குக் கூட்டிட்டு வரும் இந்திய அணி, பேடி அப்டன் போன்ற சைக்கலாஜிக்கல் கோச்களைக் கூட்டி வர வேண்டும்…..

நாம் அனைவரும் பார்க்க விரும்புவது, லார்ட்ஸில் விடாப்பிடியாகப் போராடி வெற்றி பெற்ற அணியைத்தானே ஒழிய, எட்ஜ்பாஸ்டனில் மனதளவில் தோற்ற இந்த அணியை அல்ல…..

#அய்யப்பன்

YouTube தளத்துக்கு செல்ல ?