இந்திய அணியின் தலைவராவேன் என்று நினைத்தேன்- ஆனால் தோனி தட்டிக்கொண்டார்- யுவ்ராஜ் சிங்..!

இந்திய அணியின் மிக வெற்றிகரமான தலைவர்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் வெற்றி பயணம் 2007 T20 உலகக் கிண்ண போட்டி தொடரின் வெற்றியுடன் ஆரம்பமானது.

இளமையான ஒரு அணியைக் கொண்டு அந்த உலகக் கிண்ண தொடரை வென்று, தோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த உலகக் கிண்ண வெற்றியில் ஒரு முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தோனியின் சக வீரரான யுவராஜ் சிங் இப்போது 2007 உலகக் கிண்ண தொடர் குறித்து ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளார். 2007 T20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராகதான் நியமிக்கப்படலாம் என நம்பியதாக யுவராஜ் கூறினார்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த தோனியின் மீது தேர்வாளர்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது என்று அவர் தன் நிறைவேறாத ஆசை குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

2007 ம் ஆண்டில் டிராவிட் தலைமையில் 50 ஓவர்கள் உலகக் கிண்ண தொடரில் இந்தியா ஒழுங்காக விளையாடாமல் வெளியேறியது. அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் முத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துக்கொண்டு இளம் வீரர்கள் கொண்டு T20 உலக கிண்ண போட்டிகளுக்கான இந்திய அணி தோனி தலைமையில் உருவாக்கப்பட்டு அசத்தலான வெற்றியும் கண்டு ஆச்சரியமளித்தது.

இதுதொடர்பாக பேசிய யுவராஜ் சிங் , சீனியர் வீரர்கள் பலரும் விலகிக்கொண்டதால், T20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவின் தலைவர் பதவியை நான் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், T20 உலகக் கிண்ண தொடருக்கு எம்.எஸ். தோனி தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

அப்போது அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது எனும் கவலையை யுவி வெளியிட்டுள்ளார்.

தோனி தலைமையில் இந்திய அணி கிண்ணம் வென்றாலும் யுவராஜ் , காம்பிர் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள் எனலாம்.