4வது டி20 போட்டியில் ரூல்ஸை உடைத்து வென்றதா இந்திய அணி? கன்கஷன் விதியில் உள்ள ஓட்டை
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியில் சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்து உள்ளன. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இதை ஏற்க மறுப்பதாக ஊடகங்களிடம் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மூளை அதிர்ச்சி (Concussion) காரணமாக மாற்று வீரரை தேர்வு செய்வது தொடர்பான சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதி என்ன? அதில் இருக்கும் ஓட்டையை இந்திய அணி பயன்படுத்தியதாக ரசிகர்களே சுட்டிக் காட்டி வரும் நிலையில், அது என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டில் பவுன்சர் பந்துகள் வீசப்படும் போது பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் பகுதிகளிலோ, தலையிலோ, முகத்திலோ பந்து தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம். அது போல பந்து தலையில் தாக்கினால் மூளை அதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
அதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இது போல பாதி போட்டியில் மூளை அதிர்ச்சி காரணமாக ஒரு வீரர் மீதம் உள்ள போட்டியில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற விதியை அறிமுகம் செய்தது.
இது தொடர்பாக இரண்டு முக்கிய விதிகள் அடங்கியுள்ளன. அதில் ஒரு விதியில் இருக்கும் ஓட்டையை தான் இந்திய அணி பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விதி எண் 1.2.7.4 என்ன என்று பார்க்கலாம். “ஒரு வீரருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் போது அவர் நிச்சயமாக நீக்கப்பட்ட வீரருக்கு இணையான வீரராக இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் மேட்ச் ரெஃப்ரி மூளை அதிர்ச்சி ஏற்பட்ட வீரர் அந்தப் போட்டியின் மீதமுள்ள ஆட்டத்தில் என்னென்ன பணிகளை செய்வாரோ. அதேபோன்ற பணிகளை மட்டும் தான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டவரும் செய்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.”
இது தொடர்பான மற்றொரு விதி 1.2.7.3 – “சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் மேட்ச் ரெப்ஃரீ மூளை அதிர்ச்சி ஏற்பட்ட வீரருக்கு மாற்று வீரர் தேவை எனில், இணையான மாற்று வீரராகவும், மீதமுள்ள போட்டியில் அந்த மாற்று வீரரால் அந்த அணிக்கு அதிக பலன் ஏற்படாமல் இருக்கும் நிலையிலும் அனுமதி அளிக்கலாம்.” என கூறப்பட்டு இருக்கிறது.
இதில் முக்கிய விதியான 1.2.7.4 படி மீதமுள்ள போட்டியில் நீக்கப்பட்ட வீரர் எந்த வேலையை செய்வாரோ, அதே வேலையை செய்யக்கூடிய மாற்று வீரரை மட்டுமே அணியில் சேர்க்கலாம் என்ற விதி உள்ளது. அதன்படி சிவம் துபே பேட்டிங் செய்து முடித்து விட்ட நிலையில், இரண்டாம் பகுதியில் அவர் பவுலிங் செய்து இருக்கக் கூடும் மற்றும் ஃபீல்டிங் செய்து இருப்பார்.
இந்த இரண்டு பணிகளையும் மேற்கொள்வதற்காக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பதே இந்திய அணியின் வாதமாக இருந்திருக்க வேண்டும். அதை மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.
அதேசமயம் 1.2.7.3 என்ற விதியின்படி மீதமுள்ள போட்டியில் இந்த மாற்று வீரரால் அந்த அணிக்கு அதிக பலன் கிடைக்கக்கூடாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதை தான் பலரும் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவது சிவம் துபே ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் தான் வீசி இருப்பார்.
அவர் பவுலிங் செய்திருப்பாரா? என்பதே சந்தேகம்தான். ஹர்ஷித் ராணா அளவுக்கு தனது பந்துவீச்சின் மூலம் விக்கெட்களை வீழ்த்தி இருப்பாரா? என்பதும் சந்தேகம் தான். சிவம் துபே பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராகவே அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆனால், ஹர்ஷித் ராணா இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தனது பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம், இந்திய அணி ஹர்ஷித் ராணாவை சேர்த்ததன் மூலம் அதிக நன்மையை பெற்று இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக சர்வதேச கிரிக்கட் அமைப்பு, மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் முன்னாள் அம்பயர்கள் என்ன கூறுகிறார்கள்? என்பதை பொறுத்தே இந்திய அணி செய்தது சரியா? தவறா? என்பது தெரியவரும்.