பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) வாசிம் கான் சமீபத்தில் தன்னுடைய ஓய்வு குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக தனது வீட்டிற்கு வருகைதந்ததை முகமது அமீர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கான தேர்வுக்கு தன்னைத் தானே இணைத்துக்கொள்வேன் என்றும் அமீர் அறிவித்துள்ளமை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் தேசிய அணியால் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி அமீர் கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றார். மிஸ்பா-உல்-ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரைக் கொண்ட பயிற்சியாளர்களிடம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆமீர் திருப்தியடையவில்லை. அந்த நேரத்தில், பாக்கிஸ்தானுக்காக அவர்களது பயிற்றுவிப்பின் கீழ் விளையாட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் தனது சிக்கல்கள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதாக PCB யின் உயர் அதிகாரி வாசிம் கான் உறுதியளித்ததாக ஆமீர் இன்று தெரிவித்துள்ளார்.
PSL 6 இன் இரண்டாம் கட்டத்திற்கு முன்பு வாசிம் கான் எனது வீட்டிற்குச் வந்தார் , எனது ஓய்வு குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். எனது எல்லா கவலைகளையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன், நேர்மையாகச் சொல்வதென்றால், அவர் அவற்றை மிகவும் தீவிரமாகக் கேட்டார். எனது நிலைமை தற்போதைய நிர்வாகத்தால் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டது என்று ஆமீர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வாசீம் கான் எனது கவலைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். எல்லாம் சரியாக நடந்தால், தேசிய அணியின் தேர்வுக்கு நானே தயாராவேன் என்று அமீர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆமீர் பாகிஸ்தானிலிருந்து விடைபெற்று இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து, அந்த நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட தயாராகிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை கவனிக்கத்தக்கது.