43 வயது.. நீண்ட நேரம் பேட்டிங் ஆட முடியாது.. ஆனாலும் சிஎஸ்கே-வின் முக்கிய வீரரே தோனி தான்

43 வயது.. நீண்ட நேரம் பேட்டிங் ஆட முடியாது.. ஆனாலும் சிஎஸ்கே-வின் முக்கிய வீரரே தோனி தான்

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் மற்றும் முக்கிய நட்சத்திர வீரரே தோனி தான். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. தோனி இந்த முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட இருக்கிறார். அவர் கேப்டன் இல்லை என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் ஒரு வீரராக விளையாடுவது சக வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

தோனி அணியில் இருக்கிறார் என்பதே சிஎஸ்கே வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். அவர்கள் களத்தில் இறங்கும்போது மைதானம் எங்கும் மஞ்சள் நிற உடை அணிந்த ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் தோனியைப் பார்க்கவே வருகிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் சிஎஸ்கே என்ற அணிக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அது மனதளவில் மற்ற சிஎஸ்கே வீரர்களுக்கு சிறப்பாக ஆடுவதற்கான உந்துதல் காரணியாக அமையும். இது மட்டுமின்றி, தோனி ஒரு வீரராகவும் இன்னும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவரால் நீண்ட நேரம் களத்தில் பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும், அவர் களமிறங்கும் இரண்டு, மூன்று ஓவர்களிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

அதை நாம் 2024 ஐபிஎல் தொடரிலேயே பார்த்தோம். அப்போது அவருக்கு முழங்காலில் வீக்கம் இருந்தது. அதையும் சமாளித்து அதிரடி ஆட்டத்தை ஆடினார். அவர் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை என்றாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 200-ஐ ஒட்டியே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவருக்கு முழங்காலில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமிலும் தோனி அதிரடியாக சிக்ஸர் அடித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தோனியின் உடற்தகுதி மேலும் மெருகேறி இருப்பதாகவே அந்த வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு தோன்றுகிறது. அவருக்கு 43 வயதானாலும், அவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் நட்சத்திர வீரர் தோனி தான் என்பதில் சந்தேகமே இல்லை. மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் தோனியின் பேட்டிங்கிற்காக சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Previous articleகுஷியில் வீரர்கள்.. சம்பளத்துக்கும் மேல் காசு.. 4 புதிய விதிகளை கொண்டு வந்த பிசிசிஐ
Next articleசிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்?