5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் வீரர்!

100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷான் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (08) காலை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இதன்போது ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியை நிறைவு செய்ய 14 நிமிடங்கள் 34.26 செக்கன்களை அவர் எடுத்தார்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அவரது முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் அண்மைக் காலமாக பிரகாசித்து வருகின்ற மலையக வீரரான விக்னராஜ் வக்ஷான், கடந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் தொடரின் முதலாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

 

தலவாக்கலையச் சேர்ந்த வக்ஷான், கடந்த 2019 முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றார். இதில் 2019 இல் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இறுதியாக 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 6ஆவது இடத்தையும், 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.